சனி, 14 மார்ச், 2015

இந்தத் தீர்ப்பை

இந்தத் தீர்ப்பை இன்னொரு நீதிபதி வேண்டுமானாலும் கொடுத்திருக்க முடியும். இதை விட கடுமையாகக் கூட கொடுத்திருக்க முடியும். இதை விட விரைவாகக் கூட கொடுத்திருக்க முடியும். வேறு யாருக்கும் எதிராக என்றால்….
ஆனால் இந்தத் தீர்ப்பு, சந்திரலேகா அய்.ஏ.எஸ்-க்கு ஏற்பட்ட அவலம் தெரிந்தும், பலம் பொருந்தியவர்களை எதிர்த்துக் கொடுக்கப்பட்ட தீர்ப்பு. இதை வேறு யாராலும் கொடுத்திருக்க முடியாது.
இந்தத் தீர்ப்பு “கண்ணுக்கு எதிரே எதிரிகளே இல்லாத தன்னிகரற்றவருக்கு” எதிராகக் கொடுக்கப்பட்ட தீர்ப்பு. இதை வேறு யாராலும் கொடுத்திருக்க முடியாது.
இந்தத் தீர்ப்பு அரசு நிலத்தை நடத்தைவிதிகளை மீறி வாங்கியிருந்தாலும் மனசாட்சிப்படி திருப்பிக் கொடுத்தவருக்கு எதிராகக் கொடுக்கப்பட்ட தீர்ப்பு. இதை வேறு யாராலும் கொடுத்திருக்க முடியாது.
இந்தத் தீர்ப்பு கீழ்கோர்ட்டில் வழங்கப்பட்ட ஓராண்டுத் தண்டனையை போகிறப் போக்கில் தட்டியவருக்கு எதிராகக் கொடுக்கப்பட்ட தீர்ப்பு. இதை வேறு யாராலும் கொடுத்திருக்க முடியாது.
இந்தத் தீர்ப்பு 18 ஆண்டுகள் இழுத்தடித்து, பல நீதிபதிகளை கதறடித்து, சிதறடித்த வழக்கு வன்மையாளருக்கு எதிராகக் கொடுக்கப்பட்ட தீர்ப்பு. இதை வேறு யாராலும் கொடுத்திருக்க முடியாது.
இந்த தீர்ப்பு நீதிபதி வீட்டுக்கே குடிநீர் இணைப்பை துண்டித்த பலம் பொருந்தியவருக்கு எதிராகக் கொடுக்கப்பட்ட தீர்ப்பு. இதை வேறு யாராலும் கொடுத்திருக்க முடியாது.
இந்தத் தீர்ப்பு வழிக்கு வராத நீதிபதி மருமகன் மீது, கஞ்சா வழக்குப் போடும் அறிவாளருக்கு எதிராகக் கொடுக்கப்பட்ட தீர்ப்பு. இதை வேறு யாராலும் கொடுத்திருக்க முடியாது.
இன்தத் தீர்ப்பு எந்த உருட்டல் மிரட்டலுக்கும் அஞ்சாமல், உயிர் பயத்தை மீறி, நீதியின் மீதுள்ள பற்றால் கொடுக்கப்பட்ட தீர்ப்பு. இதை வேறு யாராலும் கொடுத்திருக்க முடியாது.
இந்தத் தீர்ப்பு எந்த விலை கொடுக்க தயாராக இருந்தோருக்கும் மசியாமல், நேர்மையின் மீது நம்பிக்கையோடு கொடுக்கப்பட்ட தீர்ப்பு. இதை வேறு யாராலும் கொடுத்திருக்க முடியாது.
 இந்தத் தீர்ப்பை இவரைத் தவிற வேறு யாராலும் கொடுத்திருக்கவே முடியாது !

திங்கள், 9 மார்ச், 2015

கண்ணதாசன் தத்துவம்

கல்லிலே நார் உரிக்க முடியுமா என்று கேட்கிறார்கள். ஏன் முடியாது? ‘அரசியல்’ என்பது என்னவாம்?

அடிக்கடி தவறு செய்பவன் அப்பாவி. ஒரே தவறைத் திரும்பத் திரும்ப செய்கிறவன் மூடன். ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை. தன்னையறியாமல் தவறு செய்து, தன்னையறிந்து திருத்திக் கொள்கிறவனே மனிதன்.

ஆணவமும் அழிவும் இரட்டைக் குழந்தைகள். இரண்டாவது குழந்தை மெதுவாக வளரும். அவ்வளவு தான்.

நிலத்தில் வளரும் களைகள் பெரிய மரங்களாவதில்லை. அற்ப ஆசைகள் பெரிய வெற்றியைத் தேடித் தருவதில்லை.

தற்புகழ்ச்சி என்பது வேறொன்றுமில்லை. விற்பனையாகாத சரக்கிற்குச் செய்யப்படும் விளம்பரமே!

அதிகமான ஆரவாரம் செய்யும் அரசியல்வாதியே ஜனங்களின் முட்டாள்தனத்தைச் சரியாக எடை போட்டவன்.

சாப்பிடும் போது உங்கள் இஷ்டத்துக்குச் சாப்பிடுகிறீர்கள். ஆனால் வாந்தியோ அதனிஷ்டத்திற்கு வருகிறது. காரியத்தை உங்கள் விருப்பப்படி செய்கிறீர்கள், எதிரொலி இறைவன் விருப்பப்படி வருகிறது.

வீட்டுக்கொரு நாயை வளர்த்தும் மனிதன் விசுவாசத்தைக் கற்றுக் கொள்ளவில்லையே! இனி நாய்கள் மனிதனை வளர்த்து, அதைக் கற்றுக் கொடுக்குமா?

மலரைப் பார்; கொடியைப் பார்; வேர் எப்படி இருக்குமென்று பார்க்க முயற்சிக்காதே. அதைப் பார்க்க முயன்றால், நீ மலரையும் கொடியையும் பார்க்க முடியாது.

ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை முட்டாள்கள் கையிலே விட்டு விட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டவனைக் குறை சொல்வது தான் ஜனநாயகம்.

கடவுள் மனிதனை பூமிக்கனுப்பும் போது ஒன்றே ஒன்று தான் சொல்லி அனுப்பினார். “நீ திரும்பவும் மனிதனாக வராதே, தெய்வமாக வா” என்பதே அது.

வாலிப வயதில் முட்டாளாக இருந்ததாக நான் இப்போது நினைக்கிறேன். ஆனால் நடுத்தர வயதில் முட்டாளாக ஆவோம் என்று நான் அப்போது நினைத்ததில்லை.

அறுந்து போன பட்டம் எங்கே போய் விழும் என்பதும், ஆத்திரக்காரன் கதை எதிலே முடியுமென்பதும் ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும்.

நாலு நாள் வளர்த்த கோழிக்குக் கூடத் தான் வாழும் வீடு எது என்பது தெரிகிறது. நாட்டுச் சொத்தை நாற்பது வருஷம் சாப்பிட்ட மனிதனுக்குத் தேச பக்தி இல்லையே!

ஒவ்வொரு மரணமும் அழுகையோடு முடிந்து விடுகிறது. ஒவ்வொரு அழுகையும் மரணத்தோடு முடிந்து விடுகிறது.

’இன்ன விஷயத்தைத் தான் ரசிப்பேன்’ என்று பிடிவாதம் செய்யும் ரசிகனுக்காக நான் எதையும் எழுத முடியாது. அப்படி எழுதினால் இன்னும் நாலு பக்கங்களுக்கு மேட்டர் வேண்டுமென்று கையைக் கட்டிக் கொண்டு நிற்கிற கம்பாஸிடருக்காக எழுதியது மாதிரி தான் இருக்கும்.

தெய்வ பக்தியுள்ளவன் வாழ்க்கையில் அஞ்சுகிறான்; ஆனால் மரணத்தைக் கண்டு அஞ்சுவதில்லை. நாத்திகன் வாழ்க்கையைக் கண்டு அஞ்சுவதில்லை. ஆனால் மரணத்தைக் கண்டு அஞ்சுகிறான்.

ஒரு விஷயத்தில் பிறரது அங்கீகரத்தை நீ எதிர்பார்த்தால், அது நீ முழு அறிவோடு சிந்தித்த விஷயமல்ல என்று பொருள்.

’உங்களுக்குச் சோறு போடுவேன்’ என்று சொல்வதன் மூலமே, உங்கள் பசியைத் தீர்க்கக்கூடிய சக்தி அரசியல்வாதி ஒருவனுக்குத் தான் உண்டு.
- கண்ணதாசன்

சனி, 7 மார்ச், 2015

நெஞ்சை நிமிர்த்திச் சொல்ல நமக்கு உரிமை உண்டு. மகளிர் தினச்செய்தி

ஆண்களுக்கு இணையான சமத்துவம் நிலவச் செய்திட உலக மகளிர் நாளில் உறுதியேற்போம்: கலைஞர்

திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள உலக மகளிர் நாள் வாழ்த்துச் செய்தியில்,

இன்று உலக மகளிர் நாள்!

19ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் முதலிய ஐரோப்பிய நாடுகளிலும், பின்னர் அமெரிக்காவிலும்,ரஷ்யாவிலும் ஆயிரக்கணக்கில் மகளிர் திரண்டு தங்கள் ஊதிய உயர்வு, எட்டுமணிநேர வேலை, வாக்களிக்கும் உரிமை முதலியவற்றை வலியுறுத்திக் கிளர்ந்தெழுந்து போராடினர். அப்போராட்டங்களின் ஒருகட்டத்தில் பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க் என்னும் மன்னன் பெண்களை அரசவை ஆலோசனை குழுக்களில் இடம்பெறச் செய்யவும், பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848ஆம் ஆண்டின் மார்ச்சுத் திங்கள் 8ஆம் நாள்! பின்னர் அந்நாளே, “உலக மகளிர் நாள்”  என ஆண்டுதோறும் உலகெங்கும் கடைப்பிடிக்கப்பட்டு, மகளிர் மேம்பாடு குறித்த திட்டங்கள் உருவெடுக்கத் தொடங்கின.

தமிழகத்தில் 1967ஆம் ஆண்டிலும், அதன் பின்னரும் அமைந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு, மகளிர் சமுதாய மேன்மைக்கு மகத்தான பல சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றி நடைமுறைப்படுத்தியது. அதன் விளைவாகத்தான் இன்று எங்கும் - எல்லா அலுவலகங் களிலும், எல்லாத் துறைகளிலும், எல்லாக் கலைகளிலும் பெண்கள் பங்குபெற்றுப் பயனடைந்து முன்னேற்றம் கண்டு சாதனைகள் பல படைத்துப் பெருமைகளைக் குவித்து வருகிறார்கள் என்பதனை எவராலும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது. 

இந்தியாவிலேயே முதன்முறையாக அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கிடும் திட்டம்! பெண்களுக்குச் சம சொத்துரிமை வழங்கிட தனிச் சட்டம்! உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் திட்டம்! காவல்துறையில் பெண்களைக் காவலர்களாக நியமனம் செய்யும் திட்டம்! விதவை மகளிர் திருமண நிதி உதவித் திட்டம்! 10ஆம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு மூவலூர் மூதாட்டியார் பெயரில் திருமண நிதியுதவித் திட்டம்! ஏழைப் பெண்கள் உயர் கல்வி பயில ஈ.வெ.ரா. நாகம்மையார் நினைவு மகளிர் இலவசப் பட்டப்படிப்புத் திட்டம்; பின்னர் பட்ட மேற்படிப்பு நீட்டிப்பு! ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆறாயிரம் ரூபாய் நிதியுதவி நல்கும் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம்! விதவைப் பெண்களுக்கும், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கும் 18 வயதிற்கு மேற்பட்ட மகன் இருந்தாலும் உதவித் தொகை வழங்கும் திட்டம்! இலட்சக்கணக்கான மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உருவாக வழிவகுக்கப்பட்ட மகளிர் திட்டம்!

அரசு உருவாக்கிடும் தொழில் மனைகளில் 10 சதவீத மனைகளைப் பெண் தொழில் முனைவோருக்கு ஒதுக்கீடு செய்யும் திட்டம்! திருக்கோயில்களில் செயல்படும் அறங்காவலர் குழுக்களில் மகளிர் ஒருவரை அறங்காவலராக நியமிக்க வகை செய்யும் சட்டம்! மகளிர் சிறு வணிகக் கடன் திட்டம்! ஏழைத் தாய்மார்கள் மனம் குளிர இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் திட்டம்! எரிவாயு இணைப்புடன் இலவச எரிவாயு இலவச அடுப்புகள் வழங்கும் திட்டம்! ஆதிதிராவிட மகளிர்க்கு விமானப் பணிப் பெண் பயிற்சி வழங்கும் திட்டம்! ஐம்பது வயது கடந்தும் திருமணமாகாமல், உழைத்து வாழ முடியாத சூழலில் வாழும் ஏழைப் பெண்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கும் திட்டம்! இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட சத்துணவுத் திட்டப் பணியாளர்கள் பயன்பெற காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்கும் திட்டம்! அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கூடுதல் மருத்துவர்களும், செவிலியர்களும் நியமிக்கப்பட்டு, கிராமப்புற மகளிர்க்கு 24 மணிநேர மருத்துவச் சேவை அளிக்கும் திட்டம்!– 

எனப் பல்வேறு திட்டங்களையும், சட்டங்களையும் நிறைவேற்றி, அரசுத் துறைகளிலும், அரசியல் களங்களிலும், தொழில் முறைகளிலும் பெண்கள் முன்னேற்றத்திற்குத் தேவையான அடித்தளங்கள் பலவற்றை வலுவாக அமைத்துத்தந்துள்ளது திராவிட முன்னேற்றக் கழகமே என்பதனை



நெஞ்சை நிமிர்த்திச் சொல்ல நமக்கு உரிமை உண்டு.

ஆனால், 2011க்குப் பிறகு, எங்கு நோக்கினும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்கதையாகி, பெண்கள் பாதுகாப்பின்றிப் பல வழிகளிலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதனை இவ்வேளையில் வேதனையுடன் நினைவுகூரும் நிலை தமிழகத்தில் நிலவுகிறது. மனித குலத்தின் மகத்தான சக்திகளில் ஒன்றாகத் திகழும் மகளிர்க்கு எதிரான இத்தகைய கொடுமைகள் முற்றிலும் அகற்றப்பட - கழக அரசு காலத்தில் தொடங்கப்பட்ட பெண்கள் நலத் திட்டங்கள் தங்கு தடையின்றித் தொடர்ந்திட - எங்கும் எதிலும் ஆண்களுக்கு இணையான சமத்துவம் நிலவச் செய்திட உலக மகளிர் நாளில்  உறுதியேற்போம்! தமிழக மகளிர் அனைவர்க்கும் “உலக மகளிர் நாள்” நல்வாழ்த்துகளை உரித்தாக்குவோம்! இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார். 

வெள்ளி, 6 மார்ச், 2015

கலைஞர் ஆற்றிய உரை

திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டம்: 
கலைஞர் ஆற்றிய உரை

சென்னையில் இன்று(5-3-2015)  நடைபெற்ற திமுக. தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் கலைஞர் ஆற்றிய உரை:

 ’’கழகத்தின் பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் அவர்களே, கழகத்தின் பொருளாளர் கழகத்தின் வருங்காலம் (பலத்த கைதட்டல்) தம்பி ஸ்டாலின் அவர்களே, கழகத்தினுடைய முதன்மைச் செயலாளர் தம்பி துரை முருகன் அவர்களே, தலைமைக் கழகத்தின் பல்வேறு அமைப்புகளின் செயலாளர்களே, இந்தக் கூட்டத்திலே கலந்து கொண்டுள்ள செயற்குழு உறுப்பினர்களே, என்னுடைய உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியையும், வணக்கத்தையும், வாழ்த்துகளையும் முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.

 நம்முடைய இனமானப் பேராசிரியர் அவர்கள் பேச அழைக்கப்பட்டும் - அவர் பேச வேண்டிய தேவையில்லை என்பதை அவரே குறிப்பிட்டு -அவருடைய கருத்துகளைச் செயல்படுத்துகின்ற வகையில் நான் பேச முற்பட்டுள்ளேன்.

 காலையிலே தொடங்கிய இந்தச் செயற்குழு; மிக முக்கியமான தீர்மானங்களை உங்களுடைய ஒப்புதலோடு நிறைவேற்றி ஒரு பகுதி நிகழ்ச்சி நிறைவுற்றிருக்கிறது. ஒரு பகுதி நிகழ்ச்சி என்று நான் குறிப்பிடக் காரணம், இங்கே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை, நாம் எப்படி செயல்படுத்தவேண்டும், எப்படி செயல்படுத்தப் போகிறோம் என்ற அறிவிப்புகளோடு மிக விரைவிலே நம்முடைய தலைமைக் கழகம் அறிவிக்கவிருக்கிறது. அப்படி அறிவிக்கும்போது, அவற்றையெல்லாம் செயல்படுத்த என்னென்ன பணிகளை உங்கள் பகுதியிலே நீங்கள் நிறைவேற்ற வேண்டுமோ, அவற்றையெல்லாம் மேற்கொள்வதற்கு இப்போதே நம்முடைய செயற்குழு உறுப்பினர்கள் ஆங்காங்குள்ள கழக அமைப்புகளைக் கலந்து கொண்டு தயாராக வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

 செயற்குழுவிலே என்னென்ன தீர்மானம் என்று நாளைக்குப் பத்திரிகைகளைப் பார்ப்பவர்கள் - அல்லது இந்தக் குழுவிலே கலந்து கொண்ட உங்களைக் கேட்பவர்கள் அனைவரும் வியக்கத்தக்க அளவுக்கு, ஏற்கத்தக்க அளவுக்கு இன்றையதினம் நம்முடைய தீர்மானங்கள் தமிழகத்திலே உள்ள எல்லா பிரச்சினைகளையும், இந்தியத் துணைக் கண்டத்தில் தேவைப்படுகிற பிரச்சினைகளையும், மாற்றப்பட வேண்டிய கருத்துகளையும் உள்ளடக்கி நிறைவேற்றப் பட்டிருக்கின்றன.

 இந்தப் பிரச்சினைகளை யெல்லாம் செயல்படுத்தக் கூடிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. ஏனென்றால் இது நம்முடைய பிரச்சினைகள். நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் அனைத்தும் தமிழகம் சார்ந்த - தென்னகம் சார்ந்த - இந்தியாவிலே தழைத்தோங்க வேண்டுமென்று நாம் கருதுகிற பல பொதுவான கொள்கைகளையெல்லாம் உள்ளடக்கிய தீர்மானங்களாகும்.

 செயற்குழு, பொதுக்குழு என்றால் அதிலே தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவது என்பது வாடிக்கை. அந்த வாடிக்கையிலே நிறைவேற்றப்பட்டவை இந்தத் தீர்மானங்கள் என்று யாரும் கருதாமல், இவைகள் எல்லாம் நாமே முன்னெடுத்துச் சென்று தமிழ்நாட்டு மக்களுக்கு, இன்னும் விரிவாகச் சொல்ல வேண்டுமே யானால் தென்னாட்டு மக்களுக்கு, மேலும் அதை விரிவுபடுத்த வேண்டுமேயானால் இந்தியாவிலே உள்ள சமதர்ம நோக்குடைய, மத சார்பற்ற நோக்குடைய மக்களுக்கு எடுத்துக் காட்ட வேண்டிய அறிவுறுத்த வேண்டிய, அனைவரும் கடைப் பிடிக்க வேண்டுமென்று எடுத்துக் காட்டக் கூடிய தீர்மானங்களாகும்.

அப்படிப்பட்ட தீர்மானங்களைத் தான் இன்றையதினம் இந்தச் செயற்குழுவிலே நாம் நிறைவேற்றியிருக்கிறோம். எனக்கு ஒரு அய்யப்பாடு உண்டு. இவ்வளவு விரைவிலே, பல்வேறு கழக நிகழ்ச்சிகளை நடத்தி விட்டு - ஊர்வலங்கள் என்றும், ஆர்ப்பாட்டங்கள் என்றும்,  போர்ப்பாட்டு பாடுகின்ற பேரணிகள் என்றும் நடத்தி விட்டு, செயற்குழுவைக் கூட்டியிருக் கிறோமே, செயற்குழுவுக்கு அனைவரும் வருவார்களா என்ற ஆவலோடு, எதிர்பார்ப்போடு தான் இந்த மண்டபத்திற்குள் காலையிலே நான் நுழைந்தேன். 

என்னுடைய எதிர்பார்ப்பு தவறு என்று எனக்கு எடுத்துக் காட்டுவதைப் போல செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் இங்கே வந்திருப்பது நாம் மகிழ்ச்சியடையத் தக்க, நம்பிக்கைப் பெறத் தக்க ஒன்றாக அமைந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இதைக் கூட, குறை சொல்பவர்கள் இருக்கக் கூடும். 

எதிர்க் கட்சியிலே, மாற்று முகாமிலே, பரம்பரை பரம்பரையாகப்பகை பாராட்டி வருகின்ற கூட்டத்திலே இருக்கக் கூடும். இன்றைய நிகழ்ச்சி பற்றி என்ன சொல்வார்கள்? இவ்வளவு பெரிய விளம்பரம் செய்து செயற்குழுவினைக் கூட்டினார்கள், அதிலே பொதுச் செயலாளர், பேராசிரியரையே பேச விட வில்லை என்று சிலர் சொல்வார்கள். அதை இல்லை என்று மறுப்பதைப் போல நம்முடைய பேராசிரியர் என்னுடைய அருகிலேயே அமர்ந்து - நான் பேசுவதை இங்கே கவனித்துக் கொண்டிருக்கிறார். அவர் பேச வேண்டியதையும், இன்றைக்கு இல்லா விட்டாலும் என்றைக்கோ ஒரு நாள் பேசுவதற்குக் காத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு சில நாட்களாக உடல் நிலை சரியில்லை. அந்த உடல் நிலையையும் பொருள்படுத்தாமல், அவர் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார் என்றால், இந்த நிகழ்ச்சியில் நாம் எடுக்க வேண்டிய முடிவுகளை - நாம் பதிய வைக்க வேண்டிய தீர்மானங்களை தானும் கலந்து கொண்டு, தன்னுடைய ஒப்புதலோடும் இது செய்யப்பட்டது என்பதை நமக்கு அல்ல, மாற்றாருக்கு நினைவூட்டுவதற்காக, அறிவிப்பதற்காக அவரும் கலந்து கொண்டிருக்கிறார்.

 இங்கே என்னுடைய உதவியாளர்கள் சில குறிப்புகளை எழுதிக் கொடுத்தார்கள். அது தட்டச்சு செய்யப்பட்டு என் கைக்கு வந்தன. அந்தக் குறிப்புகளில் மிக முக்கியமான கருத்து என்னவென்றால், “கழகத் தேர்தல்கள் முடிந்து விட்டன- உள்கட்சிப் பிரச்சினைகள் ஒழிக்கப்பட வேண்டும். நாம் அனைவரும் தி.மு.க.என்ற உணர்வு வரவேண்டும்” என்பது தான் அவர்கள் என் மூலம் உங்களுக்கு அறிவிக்க வேண்டிய கருத்தை நினைவுபடுத்தியிருக்கிறார்கள். அவர்கள் என்னோடு, என் இல்லத்தில், என்னுடைய கழக அலுவலகத்தில் என்னோடும், பேராசிரியரோடும், மற்றவர்களோடும் உழைத்துக் கொண்டிருப்பவர்கள். அவர்களுடைய நினைவிலே என்ன கருத்து ஏற்பட்டிருக்கிறது என்பதற்காகத்தான் இதனைச் சொல்லுகிறேன். “கழகத் தேர்தல்கள் முடிந்து விட்டன - உள்கட்சிப் பிரச்சினைகள் ஒழிக்கப்பட வேண்டும் - நாம் அனைவரும் தி.மு.க. என்ற உணர்வு வர வேண்டும்” என்று எழுதியிருக்கிறார்கள். எனக்கும் சேர்த்து - நம்முடைய பேராசிரியருக்கும் சேர்த்து - நாமனைவரும் தி.மு.க. என்ற உணர்வு வரவேண்டுமென்று எழுதி கோடிட்டுக் காட்டியிருக்கிறார்கள். 

இன்றைக்கு கழகத்தின் தேர்தல்கள் எல்லாம் முடிந்து, “அப்பாடா” என்று பெருமூச்சு விட்டு, எங்கெங்கே என்னென்ன கிளைகள், எந்தெந்த அமைப்புகள் என்றெல்லாம் விசாரித்தறிந்து, அவைகளை எல்லாம் மனதிலே பதிய வைத்துக் கொண்டு, அந்தக் கழகம் மேலும் மேலும் எப்படி தன்னை வளப்படுத்திக் கொள்ள வேண்டும், விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதை எடுத்துக் காட்ட இன்றைக்கு இந்தக் கூட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன்.

 கழகத்தை எப்படி வளப்படுத்த வேண்டும் என்று நான் சொன்ன இந்த வார்த்தையை யாரும் தவறாகப் புரிந்து கொண்டு, நம்மை எப்படி வளப்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற எண்ணத்திற்குப் பலியாகாமல் “முதலில் கழகம் -பிறகு தான் நாம்” என்ற உணர்வோடு நாம் பணியாற்ற வேண்டுமென்ற அந்த உணர்வோடு இங்கிருந்து கலைந்து சென்றால், அதுவே திராவிட முன்னேற்ற கழகத்தை அண்ணா எண்ணியபடி, நாமெல்லாம் எண்ணியபடி, நாமெல்லாம் எப்படி உழைக்கிறோம், அந்த உழைப்பின் பயனாக பெற முடியும். அந்தப் பயனைப்பெறப் போகிறோமா? அல்லது இங்கே காலையிலே பேசிய நம்முடைய நண்பர்கள் சிலர் சொன்னதைப் போல வருகின்ற இந்தத் தேர்தலில் நாம் வெற்றி பெற என்ன வழி என்பதைப் பற்றி மாத்திரம் சிந்திக்கப் போகிறோம் என்றால், கழகத்தின் தேர்தல் வெற்றி என்பதைப் பற்றி நாம் முழு மூச்சாக, அதிலே பாடு பட வேண்டும், பணியாற்ற வேண்டும் என்பது ஒரு புறம் இருந்தாலும்கூட, அது தான் அகில இந்தியாவில், ஏன், இந்தியத் துணைக் கண்டத்தையும் மீறி வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழர்கள் மத்தியில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு வலிவைச் சேர்க்கும், பெயரைத் தரும், திராவிட முன்னேற்றக் கழகம் எந்தக்  காலத்திலும், யாராலும் அழிக்கப்பட கூடிய ஒரு சக்தி அல்ல; அந்தச் சக்தியைத் தோற்றுவித்தவர்கள் பெரியார் அவர்களும், பெரியார் வழி நின்ற பேரறிஞர் அண்ணா அவர்களும், அவர்கள் வழி நின்று நாமனைவரும் கட்டிக் காத்து வருகின்ற இந்தக் கழகம் ஒரு நாளும் தேயாது, மாயாது (பலத்த கைதட்டல்) என்ற உறுதி நமக்கு உண்டு. அந்த உறுதியின் அடிப்படையிலே தான் இந்தக் கழகத்தைப் பற்றி நாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

 ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்வு, அவர்களுடைய சுற்றத்தார், உற்றார் உறவினர் இவர்களுடைய வாழ்வு இவர்களைப் பற்றித் தான் கவலை என்றில் லாமல், ஒவ்வொருவரும் துறவி போல - அதைப் பற்றியே கவலைப்படாமல், பற்றற்றவர்கள் போல இந்தக் கழகத்தை நடத்த வேண்டுமென்று உறுதியை மேற்கொள்ள வேண்டும் என்பதைத் தான் நான் வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறேன்.

 நாம் பேசுவதெல்லாம், எழுதுவதெல்லாம் எனக்காகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் பேசுகிறோம், எழுதுகிறோம். பெரியாரும், அண்ணாவும் எதற்காக உழைத்தார்கள்? எதற்காகப் பேசினார்கள்? எதற்காகப் பாடுபட்டார்கள்? எதற்காகப் பணியாற்றினார்கள் என்பதை ஒருக் கணம்
சிந்தித்தால் நாம் நம்மைப் பற்றி நாமே சிந்திக்கின்ற அந்தப் பணியிலேயிருந்து பின் வாங்கிக் கொள்ளலாம். இல்லையேல் திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு சமுதாய இயக்கம் என்கிற உணர்வோடு, இது தொடக்கத்திலிருந்து இதுவரையிலே எப்படியெல்லாம் இந்த இயக்கம் பாடுபட்டிருக்கிறது,பணியாற்றியிருக்கிறது, திராவிட முன்னேற்றக் கழகத்தால் நாட்டிற்கு குறிப்பாக தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள நன்மை என்ன, பெருமை என்ன, வாய்ப்புகள் என்ன,வசதிகள் என்ன என்பதை எண்ணிப் பார்த்தால் தான் தெரியும். நாம் இல்லாவிட்டால் தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர்கள் அவர்களிலும் பிற்படுத்தப்பட்டோர், வாய்ப்பு பெற்றிருப்போர் அவர்களை யெல்லாம் முன்னேற்றுவதற்கு இந்தக் கழகம் மாத்திரம் இல்லாமல் இருந்தால் கொஞ்சம் கண்ணை மூடிக் கொண்டு எண்ணிப் பாருங்கள். என்ன ஆகியிருக்கும் தமிழ்நாடு என்பதை சிந்தித்துப் பாருங்கள். நாம் விழிப்போடு இருக்கின்ற இந்த நேரத்திலேயே “இந்தி” மீண்டும் வரும் என்று சொல்லப்படுகிறது. நாம் விழியையும் மூடிக் கொண்டிருந்தால் இந்நேரம் “இந்தி”, அந்த மொழி ஆதிக்கம் நம் தலையில் ஏறிக் கூத்தாடிக் கொண்டிருக்கும். அதையும் எண்ணிப் பாருங்கள். சாதி மதம் கூடாது, மதச் சார்பற்ற நிலை வேண்டும் என்று இன்றைக்கு முழக்கமிடுகின்ற எல்லா கட்சிகளும் - நம்முடைய இந்த முழக்கத்தை ஒரு காலத்திலே எள்ளி நகையாடியோர் இன்றைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்தச் சூழ்நிலைக்கு யார் காரணம்? யாரால் இந்தச் சூழ்நிலை உருவாயிற்று? “சாதிகள் இல்லையடி பாப்பா” என்று பாரதி பாடினாரே; அப்படி சாதிகளே இல்லை, அனைவரும் சமம் என்ற சமத்துவ முழக்கம் இன்றைக்குக் கேட்பதற்கு யார் காரணம்? திராவிட முன்னேற்றக் கழகம் அல்லவா? என்ற இந்தக் கேள்விக்குக் கிடைக்கின்ற பதில் ஆம், ஆம், ஆம், முக்காலும் உண்மை என்று சொல்லக் கூடிய அளவுக்கு நாம் நம்மைத் திரும்பிப் பார்த்துக் கொள்கிறோம். நாம் பஞ்சமர்களாக - மன்னிக்க வேண்டும் - சில சாதிப் பெயர்களைச் சொல்வதற்காக - பறையர்களாக, பள்ளர்களாக, தொழும்பர்களாக - யாராலும் மதிக்க முடியாத தோட்டிகளாக, தமிழ்ச்சமுதாயத்திலே ஒரு பிரிவு இருந்தது இல்லையா? அப்படி இருந்ததையெல்லாம் இன்றைக்கு ஒழித்தது யார்? அவற்றையெல்லாம் அழித்து விட்டு எல்லோரும் தமிழர்கள் தான், தமிழ் மொழி பேசுகின்றவர்கள் தான், திராவிட இனத்தைச்சேர்ந்தவர்கள் தான் என்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கியது பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் அல்லவா? அதற்கெல்லாம் காரணகர்த்தாகளாக இருந்து அந்தக் கொள்கைகளை நாடெங்கும் பரப்பி, அந்த இலட்சியங்களை எல்லோருடைய இதயங்களிலும் பதிய வைத்த பெருமை நம்மைத் தவிர வேறு யாருக்கு உண்டு என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஆகவே நாம் சாதியால், மதங்களால், பல்வேறு பிரிவுகளால் பிளவுபடுத்தப்பட்டிருந்த ஒரு சமுதாயத்தை, நாமெல்லாம் தமிழர், திராவிடர் என்ற ஒரே இன மக்கள். நமக்கு சாதிகள் பாகுபாடு கிடையாது. நமக்கு மத வேறுபாடு கிடையாது. 

எம்மதமும் சம்மதமே தான் என்ற அந்த அளவோடு ஒரு இயக்கத்தை சமுதாய ரீதியில் - அரசியல்
ரீதியாக ஆயிரம் பேர் வரலாம்! ஒரு இயக்கத்தை உருவாக்க, சுட்டிக்காட்ட, வளர்க்க அதனை ஆட்சியிலே உட்கார வைக்க ஆயிரம் பேர் வரலாம். ஆனால்  நான் மொழியால் தமிழன்; இனத்தால் திராவிடன் என்று சொல்லிக் கொள்ளக்கூடிய மனப் பக்குவமும், மனத் துணிவும் இந்தியாவிலே குறிப்பாக தமிழகத்திலே நம்மைத் தவிர வேறு யாருக்கு வந்தது? வரக் கூடும். எனவே அத்தகைய பெருமைக்குர்ய நாம் இந்த இயக்கத்தை இத்தனை ஆண்டுக்காலம் வளர்த்து கட்டிக் காத்து - வளர்த்து - பெரியாருடைய இழப்புக்குப் பிறகும் பேரறிஞர் அண்ணா அவர்களுடைய மறைவுக்குப் பிறகும் அவர்கள் வளர்த்த கொள்கைகளை நாமும் வளர்க்கின்ற அந்த முயற்சியிலே வெற்றி பெற்றிருக்கிறோம் என்றால் அந்த வெற்றிக்குக் காரணம் நான் மாத்திரமல்ல; நம்முடைய பேராசிரியர் மாத்திரமல்ல; நம்முடைய தளபதி ஸ்டாலின் மாத்திரமல்ல; நீங்கள் எல்லோரும் சேர்ந்து தான் இந்த வெற்றிக்குக் காரணம் (பலத்த கைதட்டல்). ஆகவே தான் எதுவாக இருந்தாலும், நாங்களாக எந்த முடிவையும் எடுக்காமல், எல்லா முடிவுகளையும், ஜனநாயக ரீதியில், செயற்குழுவைக் கூட்டி, பொதுக் குழுவைக்கூட்டி, கலந்தாலோசித்து அவர்களுடைய எண்ணங்களை அறிந்து, கருத்துகளைக் கேட்டு ஏற்க வேண்டியதை ஏற்று, திருத்த வேண்டியதை திருத்தி, இந்த இயக்கத்தைத் தொடர்ந்து நடத்திச் செல்ல வேண்டும். நாம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், நமக்குப் பிறகும் நம்முடைய கொள்கைகளை உறுதியோடு ஏற்றுக் கொண்டுள்ள இளைஞர்கள் இருக்கிறார்கள், வாலிபர்கள் இருக்கிறார்கள், மாணவர்கள் இருக்கிறார்கள், தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்ற அந்தத் துணிவோடு தான் இந்த இயக்கத்தை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். எனவே இது எதற்காகக் கூட்டப்பட்ட செயற்குழு? புரிந்து கொள்ள வேண்டும் நீங்கள். நம்முடைய கடமைகளிலே ஒன்று, ஒரு கழகம், ஒரு இயக்கம் தன்னுடைய குழுக்களின் கூட்டத்தை அடிக்கடி கூட்ட வேண்டும் என்ற அந்த அடிப்படையில் கூட்டப்பட்ட செயற்குழு அல்ல இது. இந்தச் செயற்குழுவைக்கூட்டி, இதிலே எடுக்கப்படுகின்ற முடிவுகள், தமிழகத்திலே மட்டுமல்ல, இந்தியாவிலே மாத்திரமல்ல, ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவேண்டுமென்பதற்காக இந்தக்கூட்டத்தை நாம்கூட்டியிருக்கிறோம். இந்தக் குழுவின் வெற்றிக்கு உங்களுடைய கருத்துகள், உங்களுடைய எண்ணங்கள் எல்லாம் துணை நிற்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அந்த நம்பிக்கையோடு தான் இவ்வளவு நேரம் நானும் பேராசிரியரும் இங்கே காத்திருந்து, நம்முடைய தளபதியும் இங்கேயிருந்து - அனைவரும் உங்களுடைய கருத்துகளை, நல்லதை, கெட்டதை, ஏற்கத்தக்கவை, ஏற்க இயலாதவை இன்னும் கொஞ்ச காலத்திற்குப் பிறகு ஏற்றுக்கொள்ளலாம் என்று ஒத்தி வைக்கிற பல கருத்துகள் உண்டு. அந்தக் கருத்துக்களை யெல்லாம் கூட்டிப் பார்த்து, அந்தக் கருத்துகளுக்கெல்லாம் எப்போது
முதல் இடம்? எந்த நேரத்திலே கொடுப்பது என்பதையெல்லாம் எண்ணிப்பார்த்து, ஆய்ந்தறிந்து செயல்படுத்துவதற்காகத் தான் இந்தச் செயற்குழு கூடியிருக்கிறது. செயற்குழுவிலே 12 தீர்மானங்கள் என்ற இந்த விளைவைச் சந்தித்திருக்கிறோம். 

இந்த விளைவுகளுக்கு பயன் நாளைக்கே கிடைக்குமா அல்லது நாளை மறுநாள் கிடைக்குமா என்பதல்ல! இந்த நாட்டில், குறிப்பாக தமிழகத்தில் உருவாகியுள்ள ஒரு ஆட்சி, நம்முடைய சமுதாய கருத்துக்களுக்கெல்லாம் எதிரான ஒரு ஆட்சி. நம்முடைய இலட்சியங்களுக்கெல்லாம் எதிரான ஒரு ஆட்சி. அப்படிப்பட்ட ஆட்சி - நம்முடைய தோழர்கள் சொல்வதைப் போல“பினாமி” ஆட்சி என்றும் சொல்லலாம். அதை “ஊழல் ஆட்சி” என்றும் சொல்லலாம். அப்படிப்பட்ட ஆட்சி இப்போது தமிழகத்திலே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றால், அதை வரவிடுவதற்கு யார் காரணம் என்பதை அறிய வேண்டும்.

அந்தக் காரணத்தை அறிந்து, அடி வேரை, ஆணி வேரைக் கிள்ளியெறிந்தால்,அந்த ஆட்சியினால் பரவுகின்ற நச்சுக்காற்று தடுக்கப்படும். அப்படித் தடுக்கப்படுவதற்கு எல்லோரும் ஒன்று சேருவோம் என்று தான் உங்களை யெல்லாம் நான் அழைக்கிறேன். உங்களை அழைப்பதற்குக் காரணம், செயற்குழுவிலே இருக்கினற 50 பேரோ, 100 பேரோ, இந்த ஆட்சியை அழித்து விட்டு, துரத்தி விட்டு நம்முடைய ஆட்சியை அமைக்க முடியும் என்பதற்காக அல்ல. ஆணி வேர் போல இருக்கக் கூடிய ஆழமான கருத்துகள் - அந்தக் கருத்துகளை நாம் பலப்படுத்த வேண்டும் - அந்தக் கருத்துகள் பலமானால், பரவினால் மக்களுடைய உள்ளத்திலே இவைகள் எல்லாம் பதிய வைக்கப்பட்டால், அந்த மக்கள் மனம் மாறினால் இப்போது ஏற்பட்டிருக்கின்ற பயம், கோழைத்தனம், அச்சம், அறியாமையால் ஏற்பட்ட விளைவுகள் - இவைகளை யெல்லாம் போக்கி தமிழகத்தை பன்னெடும் நாட்களுக்கு முன்பு, “பழந்தமிழர் காலத்தில், பசும்புல் தரையில், பால் வண்ண உடை உடுத்தி, கடவுளுக்கும் காதலுக்கும் வேறுபாடு இல்லை, அவைக்காலத்தால் அழிவதுமில்லை” என்று வாழ்ந்தானே தமிழன்; அந்தத் தமிழனுடைய சமுதாயத்தை மீண்டும் பார்க்க, மீண்டும் அந்தச் சமுதாயத்தை உருவாக்க மூவேந்தர்கள் ஆண்டார்கள்; மும்மொழி இங்கே தழைத்து வாழ்ந்தது; அந்த மொழியை நாம் காப்பாற்றுவதற்காக எடுத்த சிரமங்கள், பட்ட பாடுகள் இவைகள் எல்லாம் கூட, ஒரு காலத்திலே ஒரு கூட்டத்தினுடைய ஆதிக்கத்தால் இன்றைக்கு சீரழியத் தொடங்கியிருப்பதைக் காணுகிறோம். 

தமிழகத்திற்கு என்ன விதையைப் போடலாம் என்பதைத் தெரிந்து கொண்டு சில பேர், நம்மை
விட வடக்கே இருப்பவர்களுக்கு இதிலே அறிவு அதிகம், புத்தி அதிகம். ஆகவே புத்திசாலித் தனமாக நடந்து கொள்கிறார்கள். தமிழ்நாடு என்றால், தமிழை அங்கே நாங்கள் பரப்புவோம், தமிழுக்கு ஏற்றம் தருவோம் என்று சொன்னால்தான், இங்கே தங்களுடைய கட்சியை வளர்க்க முடியும், பரப்ப முடியும், கட்சியை ஆட்சிப் பொறுப்புக்குக் கொண்டுவர முடியும் என்பதையெல்லாம் அறிந்த புத்திசாலிகள் வடக்கே இருக்கிறார்கள். வடக்கே இருப்பவர்களுக்குத் துணையாக இங்கே ஒரு கூட்டம் இருக்கிறது. அந்தக் கூட்டத்திற்குத் துணையாக சில பத்திரிகைகள் இருக்கின்றன. இவர்கள் எல்லாம் சேர்ந்து செய்கின்ற மிக முக்கியமான காரியம் என்னவென்றால், வேலை என்னவென்றால், திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்துவது ஒன்று தான். 

திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கிற வரை நாம் தமிழ்நாட்டில் தலை காட்ட முடியாது என்று கருதுகிற காரணத்தால் தான் இந்தக் கழகத்தை எப்படி வீழ்த்தலாம் என்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நான் சொல்லுகிறேன், உங்களை நம்பிச் சொல்கிறேன், நாங்கள் இருக்கும் வரையில், எங்களால் வளர்க்கப்பட்ட நீங்கள் இருக்கும் வரையில், இந்தக் கழகத்தின் செயற்குழு மாத்திரமல்ல, பொதுக் குழுவிலே உள்ளவர்கள், ஊர்களிலே உள்ளவர்கள், வட்டங் களிலே உள்ளவர்கள், இலட்சக்கணக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தோழர்கள், இவர்கள் எல்லாம் உள்ளவரை, திராவிட இயக்கத்தை எவனும் அழித்து விடலாம் என்று கனவு காணத் தேவையில்லை. அத்தகைய இரும்பு நெஞ்சம் கொண்டவர்கள் - அத்தகைய கொள்கை உரம் வாய்ந்தவர்கள் நாம்.  அதனால் தான் எத்தனையோ வீழ்ச்சிக்குப் பிறகும், எத்தனையோ கஷ்டங்களுக்குப் பிறகும், சோதனைகளுக்குப் பிறகும் வாழ்கிறோம். நம்மை சீண்டிப்பார்க்காத நெருக்கடி கால நிலைமையா? அதிலேயே தப்பித்தோம். 

தப்பித்தோம் என்றால் பயந்து கொண்டு ஓடி ஒளிந்து தப்பிக்கவில்லை. எதிர்த்து நின்று மார்பு
காட்டி, நெஞ்சத்தைத் திறந்து காட்டி தப்பித்தவர்கள் நாம். அந்தச் சட்டங்களை வீழ்த்தி யவர்கள் நாம். எந்தச் சட்டத்தையும் கண்டு நாம் அஞ்சி நடுங்கி வளைந்து, பணிந்து ஒடுங்கியவர்கள் அல்ல. அது எவ்வளவு பெரிய சட்டமாக இருந்தாலும், நம்முடைய இயக்கத்தை அழிப்பதற்காக ஏவப்பட்ட
அக்னியாஸ்திரமாக இருந்தாலும் கூட, அந்த அக்னியாஸ்திரம் உடைந்து தவிடுபொடியாகக் கூடிய அளவுக்கு நாம் பல வெற்றிகளை அதிலே பெற்றிருக்கிறோம். அப்படிப்பட்ட இயக்கம் இன்றைக்கு காலையிலே இங்கே சில நண்பர்கள் பேசியதைப் போல - நாம் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்று சொன்னார்கள் என்றால் - இப்போது எங்கே போய் விட்டது ஆட்சி? ஆட்சி நம்மிடம் தான் இருக்கிறது.

 நாம் சொன்னபடி செய்கின்ற ஆட்சி தான் இங்கே இருக்க முடியும். நாம் நினைக்கிற படி நடக்கின்ற ஆட்சி தான் இங்கே இருக்க முடியும். அப்படிப்பட்ட ஆட்சியை திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்கனவே தந்து, அந்தக் கழகத்தின் சார்பில் ஆட்சி நடத்தி - நாம் கொண்டு வந்த திட்டங்களை - நாம் உருவாக்கிய கட்டிடங்களை யாரும் தொட முடியாது, அந்தக் கட்டிடங்கள் எல்லாம் திராவிடப் பாரம்பரியத்தை - திராவிட இன உணர்வை - திராவிட சமுதாய எழுச்சியை பரப்பக் கூடியவை. அதை யாராலும் ஒன்றும் செய்து விட முடியாது என்ற அளவில் அந்தக் கழகத்தை இன்றைக்கு நிலைநாட்டியிருக்கிறோம். அது மேலும் வளர்ந்திடும், பலம் பெருகும். அப்படி பலம் பெருகும் நேரத்தில் நீங்கள் இப்போது சொன்னீர்களே, எங்கள் மாவட்டத்தில் இத்தனை தொகுதிகளில், இத்தனை சட்ட மன்ற உறுப்பினர்களைக் கொண்டு வருவோம், இத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு வருவோம் என்றெல்லாம் சொன்னீர்களே, அவைகள் எல்லாம் வீண் வார்த்தைகளாக ஆகி விடாமல், அவைகள் எல்லாம் எங்களை நம்ப வைப்பதற்காக - எங்களை மகிழ்ச்சியடையச் செய்வதற்காகச் சொல்லப்பட்ட  சொற்களாக இல்லாமல் - உண்மையிலேயே ஆக வேண்டுமென்றால் நீங்கள் ஒவ்வொரு ஊரிலும் நம்முடைய கழகத்தை சகோதர மனப்பான்மையோடு நடத்துங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

 நான் ஏன் ஆரம்பக் காலத்தில் - அண்ணா “தம்பீ” என்று அழைத்தார் - நான் “உடன்பிறப்பே” என்று அழைப்பதற்குக் காரணம் - “தம்பீ” என்றால் ஆணை மாத்திரம் குறிக்கும், “உடன்பிறப்பே” என்றால் ஆண், பெண் இருவரையும் குறிக்கும் (கைதட்டல்). ஆகவே தான் “உடன்பிறப்பே” என்று அழைத்தேன். அந்த உடன்பிறப்புகளாக நாம் தொடர்ந்து நம்முடைய பணிகளை ஆற்ற வேண்டும். நடைபெற்ற தேர்தல் - அது திருவரங்கம் இடைத் தேர்தல் ஆனாலும் சரி - அல்லது நம்முடைய ஊர்களிலே நடைபெற்ற உட்கட்சித் தேர்தல்களானாலும் சரி - அந்தத் தேர்தல்களில் ஏற்பட்ட வெற்றித் தோல்விகளையெல்லாம் மனதிலே வைத்துக் கொள்ளாதீர்கள். மறந்து விடுங்கள். எப்படி திருவரங்கம் தேர்தலை மறந்து விட்டு - இங்கே மீண்டும் வெற்றி பெறுவோம் ந்என்று கருதுகிறோமோ, நம்புகிறோமோ, அதைப் போல - இதையும் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள் என்று கேட்டுக் கொண்டு - உங்களை யெல்லாம் மீண்டும் மீண்டும் மன்றாடிக் கேட்டுக் கொள்வது, “உடன்பிறப்புக்களே” என்று நான் ந்சொன்னது அழகுக்காக அல்ல, தமிழின் அணி அழகுக்காக அல்ல, நம்முடைய ஒற்றுமையைக் கட்டிக் காக்க வேண்டுமென்று உளப் பூர்வமாக நான் கருதுகின்ற காரணத்தால் தான் (கைதட்டல்) சொல்லுகிறேன்.

 எனக்கு நேராக சம்பிரதாய முறையிலே ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறிவிட்டு, நாளைக்கு ஊருக்குப் போனதும், உள்கட்சித் தேர்தலை மனதிலே எண்ணி அதற்கு யாரையாவது பழி வாங்க வேண்டுமென்று யாரும் கருதாதீர்கள். பழிக்குப் பழி வாங்க வேண்டுமென்று கருதினால், நம்மீது தான் அந்த வாள் பாயும் என்பதை மறந்து விடாதீர்கள். இன்றைக்கு நாம் ஒருவரைப் பழி வாங்கினால், நாளைக்கு அவர் நம்மைப் பழி வாங்க மாட்டார் என்பது என்ன நிச்சயம்? ஆகவே இந்த பழி வாங்குகிற எண்ணம் கூடாது என்ற பரந்த மனப்பான்மை வேண்டும். அந்தப் பண்பு வேண்டும். அந்தச் சகோதரத்துவம் வேண்டும். 

 அண்ணா சொன்னாரே மைலாப்பூர் கூட்டத்திலே - நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் - ஒரு தாயின் வயிறு இவ்வளவு பிள்ளைகளையும் தாங்க முடியாது என்ற காரணத்தால், தனித்தனி தாய்களின் வயிற்றில் பிறந்த தம்பிகளாக நாம் இருக்கிறோhம் - என்று அண்ணா சொன்னாரே, அதை ஞாபகத்திலே வைத்துக் கொண்டு - அதை செயற்குழுவிலே இந்தக் கருணாநிதி ஞாபகப்படுத்தினாரே என்பதையும் நினைவிலே வைத்துக் கொண்டு- எதிர் காலத்தில் நாம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்தச் சமுதாயம் இருக்க வேண்டும், சமுதாயத்தின் புகழ் இருக்க வேண்டும், நம்முடைய இலக்கியங்கள் காப்பாற்றப்பட வேண்டும், நம்முடைய வரலாறு போற்றப்பட வேண்டும், நாம் தமிழர்கள் என்ற அந்த உணர்வு நிலைக்க வேண்டும்.

 நிலைப்பதற்காக நாம் பாடுபட வேண்டும். ஒருவருக்கொருவர் எவ்வளவு தான் மன வேறுபாடு
இருந்தாலும், அந்த மன வேறுபாடுகளை வெளியே காட்டிக் கொள்ளாமல் - வெளியே காட்டிக் கொள்ளக் கூடாது என்றால் - உள்ளேயும் வைத்துக்கொள்ளாமல், (சிரிப்பு) அவைகளை யெல்லாம் மறந்து விட்டு, எல்லோரும் ஒன்று போல் உழைப்போம். உழைத்தால் தான் - தேர்தலிலே வெற்றி பெற வேண்டும் என்ற அந்த இலட்சியம் நிறைவேற வேண்டுமானால் - அது பலிக்கும். தேர்தல்
மாத்திரம் முக்கியமானதல்ல. இந்தச் சமுதாயத்தையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். 

இந்தியாவிலே இருக்கின்ற சமுதாயங்களை மாத்திரமல்ல, உலகத்திலே இருக்கின்ற இனங்களிலே மிகப் பெரிய இனம், மானமுள்ள இனம், சுயமரியாதை உள்ள இனம் என்பதையெல்லாம் நிலைநாட்டவும், நாம் நம்முடைய இயக்கத்தை வளர்க்க வேண்டும் என்ற அந்த எதிர்ப்பார்ப்புகளோடு உங்கள் பணியைத் தொடர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

 தேர்தல் முக்கியமல்ல; நான் இப்படிச் சொல்வது வார்த்தைக்காகத் தான். நமது இலட்சியத்திலிருந்து நாம் பின் வாங்க மாட்டோம் என்பதில் உறுதியாக இருங்கள் என்று உங்களைக் கேட்டுக் கொண்டு, அந்த உறுதியைப் போற்ற - நிலைநாட்ட - வளர்க்க உங்கள் அனைவரையும் மன்றாடிக் கேட்டுக் கொண்டு- உங்கள் அண்ணன் என்ற முறையில் - உங்கள் தம்பி என்ற முறையில் - உங்கள் சகோதரன் என்ற முறையில் உங்களை அன்போடு கேட்டுக் கொண்டு -  ஒற்றுமையாக இருங்கள். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு - அதோடு மற்றொன்று “ஒற்றுமை” - கழக ஒற்றுமை - கழகத்திலே ஒற்றுமை என்ற நான்காவது சொல்லையும் சேர்த்து - கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, கழகத்திலே ஒற்றுமை - என்பதிலே அந்த ஒற்றுமையைப் பேணிக் காப்போம் என்ற உறுதியை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டு, இந்த நிலையில், இந்தச் செயற்குழு கூட்டத்தை நிறைவு செய்கின்ற நேரத்தில், இந்தச் செயற்குழு மிகக் குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு, மிகுந்த எழுச்சியோடு இந்த வட்டாரத்தில் இருக்கின்ற கழக மாமணிகள், செயல்வீரர்கள் அத்தனை பேருடைய ஒத்துழைப்போடு நடைபெற்றுள்ள இந்தச் செயற்குழு கூட்டம் இந்த அளவோடு நிறைவு பெறுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

வியாழன், 5 மார்ச், 2015

பிரபலங்களின் க்ளைமாக்ஸ் வசனங்கள்

பிரபலங்களின் க்ளைமாக்ஸ் வசனங்கள்
* காந்தி இறக்கும்போது ' ஹே ராம் ! ' என்றார் .
* ஜூலியஸ் சீஸர் ' யூ டூ புரூட்டஸ் ? ' என்றார் .
* கலிகுலா ( ரோம் ராஜ்ஜியத்தின் கொடுங்கோலன் ) : தன்னைக் கத்தியால் குத்திய பாதுகாவலர்களிடம் சொன்னான் , " நான் இன்...னும் இறக்கவில்லை ! "
* தாமஸ் ஆல்வா எடிசன் : " விளக்கை எரியவிடுங்கள் . என் ஆவி பிரியும்போது வெளிச்சம் இருக்கட்டும் ! "
* பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் : " இறக்கும் மனிதனால் எதையும் எளிதாகச் செய்ய முடியாது ! "
* பாபர் ( மொகலாயப் பேரரசர் ) : தன் மகன் ஹுமாயூனிடம் .... " இந்தியாவில் உள்ள இந்துக்களைத் துன்புறுத்தாதே ! "
* ஜுல்ஃபிகர் அலி புட்டோ ( பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ) : " இறைவா .....நான் ஒரு குற்றமும் செய்யாதவன் ! "
* டயானா : " கடவுளே ! என்ன நடந்தது எனக்கு ? "
* ஜொன் ஆஃப் ஆர்க் ( பிரெஞ்சுப் புரட்சியாளர் ) : தீயில் எரிந்துகொண்டு இருந்த சமயத்தில் சொன்னது . " ஜீஸஸ் ! "
* வால்டேர் : தூக்கு தண்டனைக்கு முன் ' சாத்தானை உன்னிடம் இருந்து துரத்திவிடு ' என்று சொன்ன பாதிரியாரிடம் , " எதிரிகளை உருவாக்கிக்கொள்வதர்கான நேரம் இது அல்ல ! "
* கிளியோபாட்ரா : பூ நாகத்தைக் கையில் பிடித்துக் கொண்டு , " ஆஹா... இதோ ... என் முடிவு இங்கே இருக்கிறது ! "
* பீத்தோவன் : " நண்பர்களே கை தட்டுங்கள்... இந்த நகைச்சுவை நாடகம் இன்றோடு முடியப்போகிறது ! "
* ஆன் ( இங்கிலாந்து ராணி ) ; தன் உதவியாளரிடம் , " மக்களின் நன்மைக்காக கருவூலப் பணத்தை பயன்படுத்துங்கள் ! "
* நெப்போலியன் : " ஃபிரான்ஸ் ... ஆர்மி...ஜோஸஃபின் ! "
* மேரி க்யூரி : " என்னைத் தனிமையில் இருக்க விடுங்கள் ! "
* எழுத்தாளர் ஜேன் ஆஸ்டஸ் : ' வேறு எதுவும் வேண்டுமா ' என்று கேட்ட தங்கையிடம் , " இறப்பைத் தவிர எதுவும்
* வின்ஸ்டன் சர்ச்சில் : " எனக்கு எல்லாமே போர் அடிக்குது ! " இந்த வார்த்தைகளுக்குப் பின் கோமாவுக்குச் சென்று , ஒன்பது நாட்களுக்குப் பின் மரணத்தைத் தழுவினார் .
* பெருந்தலைவர் காமராஜர் : தன் உதவியாளரிடம் , " வைரவா ! விளக்கை அணைத்துவிடு

செவ்வாய், 3 மார்ச், 2015

மும்பை புற நகர்மாவட்ட தி. மு.க. வின் செயளாளர்

மும்பை புற நகர்மாவட்ட தி. மு.க. வின் செயளாளர்
திரு ,அலிசேக் மீரான் அவர்களின் தந்தை திரு ,அலிசேக் மன்சூர்
அவர்களைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
.....................................................................
(தோற்றம் 03. 08. 1931, மறைவு: 03. 03. 2013)
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
கழகத் தலைவர் கலைஞர் அவர்களாலும் பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் அவர்களாலும் 'மன்சூர்' என்று அன்புடன் அழைக்கப்பட்டு அவர்களின் நெஞ்சுக்கு நெருக்கமாக இருந்த நெல்லைமாவட்டக் கழக மூத்த முன்னோடி அலிசேக் மன்சூர் மறைந்து விட்டார் என்ற செய்தி தி. மு. கழகத்திற்கு, குறிப்பாக நெல்லை மாவட்டக் கழகத்திற்குப் பேரதிர்ச்சியைத் தந்தது.
இயக்கப் பற்றுக்கு இலக்கணமாக இருந்த அலிசேக் மன்சூர் மாணவப் பருவத்திலேயே கருஞ்சட்டை வீரராக பகுத்தறிவுப் பணியாற்றியவர். துடிப்பும் துணிச்சலும் இளமைக் காலத்திலிருந்தே அவரின் அடையாளம். 1948 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் அண்ணா அவர்கள் வராத நிலையில், 'அண்ணா ஏன் வரவில்லை என்று துண்டுச் சீட்டுக் கொடுத்து பெரியாரிடம் கேள்வி கேட்ட நிகழ்வு முதல் தலைமுறை திமுகவினரால் மறக்க முடியாததாகும். இந்தி எதிர்ப்பு, இட ஒதுக்கீடு, விலைவாசி உயர்வு தொடர்பாக நடைபெற்றப் பல போராட்டங்களிலும் பங்கேற்றவர். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே இந்தி எழுத்து அழிப்புப் போராட்டம் உள்ளிட்ட இயக்கப் போராட்டங்களில் கலந்து கொண்டதால் அன்றைய ஆட்சியாளர்களால் பலமுறை கைது செய்யப்பட்டார்.
திமுக மாணவர் அமைப்பைத் தொடக்கி, இளைஞர்களிடம் கழகத்தை மிகப் பெரிய அளவில் வளர்த்தெடுத்தவர்களில் முக்கியமானவர் அலிசேக் மன்சூர் அவர்கள். ஒருமுறை அண்ணாவிடம் 'கழக மாநாட்டில் யார் யாரெல்லாம் பேசுகிறார்கள்?" என்று கேட்டபோது, 'அண்ணாதுரை முதல் அலிசேக் மன்சூர் வரை" என்று அண்ணாவால் குறிப்பிடப் பட்டது மறக்கமுடியாத வரலாற்றுப் பதிவாகும். திமுகழகத்த்தின் நெல்லை மாவட்ட முதல் மாநாட்டுச் செயலாளராக இருந்த பெருமைக்குச் சொந்தக்காரர் இவர்.
அலிசேக் மன்சூர் எத்தகைய உறுதியான கட்சிக்காரராக இருந்தார் என்பதை உணர்ந்துகொள்ள அவரது மறைவை ஒட்டி தி. மு. கழகப் பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் அவர்கள் வெளியிட்டிருந்த இரங்கல் அறிக்கை ஒன்று போதும்.
'திமுகழகத்தின் தொடக்க காலம் முதலே கட்சிப் பணியாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் பேரன்பைப் பெற்றவர். கழகத்தை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சென்ற சிறந்த பேச்சாளர். எந்த நிலையிலும் தடம் மாறாதவர்" என்று இனமானப் பேராசிரியர் அவர்கள் அலிசேக் மன்சூர் அவர்களுக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார்.
சிறந்த பேச்சாளராக மட்டுமல்லாமல் இயக்கப் பணிகளில் ஒன்றான இலக்கியப் பணியிலும் முத்திரைப் பதித்தவர். கிளர்ச்சி, நம்நாடு, தென்றல், தனியரசு, முரசொலி உள்ளிட்ட இதழ்களில் அரசியல் கட்டுரைகளும் இலக்கியக் கட்டுரைகளும் தொடர்ந்து எழுதி வந்த அருமை மிகு எழுத்தாளர்.
இவருடைய மூத்தத் தலைமுறை முதல் மூன்றாம் தலைமுறை வரை திராவிட இயக்க உணர்வு கொண்டவர்கள் என்பது குறிப்பிடத் தக்கதாகும். பெரியாரிடமும் சுயமரியாதை இயக்கத் தலைவர்களிடமும் மிகுந்த மதிப்பு வைத்திருந்தவர் இவருடைய தந்தையார் .
அலிசேக் மன்சூர் அவர்களின் திருமணம் ஏராளமான கழகத் தலைவர்களின் முன்னிலையில் 1954ல் நடைபற்றது. மும்பை புறநகர் திமுகவின் இன்றைய செயலாளராக உள்ள இவருடைய மகன் அலிசேக் மீரானின் திருமணம் தலைவர் கலைஞர் தலைமையில் 1981ல் நடைபெற்றது. இவருடைய பேரன் (அலிசேக் மீரானின் மகன்) மன்சூர் இம்ரானின் திருமணம் தளபதி மு. க. ஸ்டாலின் தலைமையில் 2010ல் நடைபெற்றது.
திமுகழகத்தின் தலைமைப் பொதுக்குழு உறுப்பினராகவும் நெல்லை மாவட்டக் கழகத்தின் பல்வேறு பொறுப்புகளில் இருந்தும் சிறப்பாகப் பணியாற்றியவர். அலிசேக் மன்சூர் அவர்களின் இல்லத்திற்கு வராத திராவிட இயக்கத் தலைவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இயக்கத்தின் மூத்த தலைவர்கள் பலரும் மிகவும் நெருக்கமாக இவருடன் பழகி இருக்கிறார்கள்.
1950 ல் கலைஞரை அழைத்து பொதுக்கூட்டம் நடத்தியவர் இவர், 1955 ஆம் ஆண்டு நெல்லை மாவட்ட சுற்றுப்பயணம் சென்ற கலைஞர் இவருடைய இல்லத்தில்தான் தங்கியிருந்தார். பேரறிஞர் அண்ணாவின் நன்மதிப்பைப் பெற்ற அன்புத் தம்பியாகவும் , கலைஞர், பேராசிரியர், நாவலர், மதுரை முத்து, சி. பி. சிற்றரசு, கே. வி. கே. சாமி, என். வி. என்., எஸ். எஸ். தென்னரசு, எம். எஸ். சிவசாமி, நாகூர் அனிபா, கா. மு. கதிரவன் , இரத்தினவேல் பாண்டியன், உள்ளிட்ட கழக முன்னணித் தலைவர்கள் பலரின் மிகச் சிறந்த நண்பராவார்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அய்யா திரு ,அலிசேக் மீரான் அவர்களின் தந்தை திரு ,அலிசேக் மன்சூர் அவர்களின் நினைவு நாளில் அய்யாவை 
அய்யாவை நினைவு கூர்வோம் போற்றுவோம் அவர் புகழை !

திங்கள், 2 மார்ச், 2015

மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்:

தமிழக மக்கள் அரசியலில் ஒரு மிகப் பெரிய

மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்: மு.க.ஸ்டாலின் உரை

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்த நாளையொட்டி சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்த விழாவில் பங்கேற்றார். அங்கு தொண்டர்களிடம் வாழ்த்துப் பெற்ற பிறகு அவர் உரையாற்றியதாவது:-

உங்களின் ஆர்வத்தை, ஆரவாரத்தை பார்க்கும்போது நிச்சயமாக உங்களுடைய வாழ்த்துக்கள் எனக்கு உற்சாகத்தை வழங்கிடும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

நம்மை பொறுத்தவரையில் இந்த சமுதாயம் வாழவேண்டும். இந்த நாடு வாழ்ந்திட வேண்டும். இந்த சமுதாயத்தை, இந்த நாட்டை வாழவைக்கக்கூடிய வகையில் நம்முடைய பணி அமைந்திட வேண்டும் என்று சொன்னால், நம்முடைய இயக்கம் தொடர்ந்து தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் பீடுநடை போடவேண்டும் என்று நான் என்னுடைய பிறந்த நாள் செய்தியாக இங்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

சாதி, மதம், இனம், மொழி இவைகளைப் பொருத்தவரையிலே யாருக்கும் பாகுபாடு இருக்கக்கூடாது. ஈரோட்டு சிங்கம் பகுத்தறிவு பகலவன், தந்தை பெரியார், வங்கக் கடலோரத்தில் 6 அடி சந்தனப் பேழையில் உறங்கியும், உரங்காமலும் உறங்கிக்கொண்டிருக்கக்கூடிய நம்முடைய பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா, அவர்கள் வழியில் இன்றைக்கும் நம்மை வழிநடத்திக்கொண்டிருக்கக்கூடிய நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். இந்த இயக்கத்திற்காக நம்முடைய திராவிட இயக்கத்தை வளர்ப்பதற்காக எந்த அளவிற்கு அரும்பாடுபட்டு இருக்கிறார்கள். தொடர்ந்து தலைவர் கலைஞர் அவர்கள் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும்.

இப்படிப்பட்ட தலைவருடைய தொலைநோக்குதான் நம்மைபோன்ற இளைஞர்களை இன்றைக்கு ஓரளவுக்கு பக்குவப்படுத்தி, தொடர்ந்து நாம் ஆற்றக்கூடிய பணிகளுக்கு உரமூட்டக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. 

மார்ச் 1 ஆம் தேதி என்பது பாகுபாடு ஒழிக்கக்கூடிய தினமாக ஐக்கிய நாடுகள் சபைகள் இன்றைக்கு இந்த நாளை கொண்டாடுகிறது. எனவே, தலைவர் கலைஞர் அவர்களுடைய வழிகாட்டுத லோடு அதை மனதிலே வைத்துக்கொண்டு நம்முடைய கழகம் பாடுபடவேண்டும். அந்த பாகுபாடுகளை ஒழிப்பதற்கு நாம் சபதம் ஏற்க வேண்டும். உறுதி எடுக்கவேண்டும் என்று நான் இந்த நேரத்திலே உங்களையெல்லாம் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். அப்படிப்பட்ட உறுதி அந்த சபதத்தை நீங்கள் எல்லாம் ஏற்றால்தான் உள்ளபடியே நீங்கள் எனக்கு சொல்லக்கூடிய வாழ்த்துக்கள் மகிழ்ச்சிகரமாக அமைந்திட முடியும் என்பதை நான் உறுதியோடு உங்களிடத்திலே எடுத்துச் சொல்ல விரும்புகிறேன்.

நாம் அனைவரும் ஒன்றுதான் என்பதை நினைவுபடுத்தக்கூடிய வகையில் இந்த மார்ச் 1ஆம் நாள் இருந்திட வேண்டும். நீங்கள் ஆணா? பெண்ணா? இளைஞரா? வயதானவரா? நகர்புறத்தவரா? அல்லது கிராமப்புறத்து வாசியா? ஏழையா? பணக்காரரா? கருப்பா? சிகப்பா? நாத்திகரா? ஆத்திகரா? என்று பாகுபாடு காட்டாத ஒரு சமுதாயத்தை உருவாக்கிடவேண்டும். பாகுபாடு ஒழிப்பு கொள்கை என்பதை நம்முடைய உடம்பில் ஓடக்கூடிய ரத்தத்தோடு நிச்சயமாக நாம் ஒப்பிட முடியும்.

நம் அனைவருடைய நரம்புகளில் ஓடுவது ஒரே ரத்தம்தான் என்பதை நாம் மறந்துவிட முடியாது. நம்மை உயிரோடு வைத்திருக்கக்கூடிய ரத்தம், மற்றவரை உயிரோடு இருக்கவைக்கவும், இன்னமும் சொல்லவேண்டுமென்று சொன்னால், ஒரு பணக்காரர் தரக்கூடிய ரத்தம், ஒரு ஏழையை வாழவைக்கிறது. ஒரு ஏழை தரக்கூடிய ரத்தம், ஒரு பணக்காரரை வாழவைக்கிறது. எனவே, ரத்தத்தை பொறுத்தவரையிலே பாகுபாடு கிடையாது. இன்னும் நான் வெளிப்படையாக சொல்ல விரும்புகிறேன். கடவுள் மீது நம்பிக்கைக்கொண்டிருப்பவர்கள் தரக்கூடிய ரத்தம் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்களை வாழவைக்கிறது. அதேபோல கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் தரக்கூடிய ரத்தம் கடவுள் மீது நம்பிக்கை உள்ளவர்களை வாழவைக்கிறது. அதனால்தான் உங்களை எல்லாம் நான் கேட்டுக்கொள்ளவிரும்புகிறேன்.

மார்ச் 1 ஆம் தேதியிலிருந்து இந்த மாத இறுதி வரையிலே நம்முடைய தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய இளைஞர்கள், நம்முடைய கழகத் தோழர்கள், ரத்தம் வழங்கக்கூடிய நிகழ்ச்சியை நடத்திட வேண்டும் என்று இளைஞர் அணியினுடைய செயலாளர் என்ற அந்த முறையிலே நான் ஏற்கனவே என்னுடைய வேண்டுகோளாக எடுத்துவைத் திருக்கிறேன்.

இன்று காலையில்கூட சில பத்திரிகைகளில் அதற்கான விளம்பரத்தை இளைஞர் அணி சார்பிலே நாங்கள் வழங்கியிருக்கிறோம். எனவே, இந்த மாத இறுதிக்குள்ளாக 1 லட்சம் யூனிட் ரத்தம் நம்முடைய இளைஞர் அணியின் சார்பில் வழங்கப்பட்டிருக்கிற இந்த செய்தி வந்தாக வேண்டும். ஏதோ இளைஞரணி மாத்திரமல்ல, கழகத் தோழர்கள் மாத்திரமல்ல, இதற்கு நமக்கு துணை நிற்க. ரோட்டரி சங்கம் நமக்கு ஒத்துழைப்பு தருகிறது. எனவே, அப்படிபட்ட அந்த ரோட்டரி சங்கத்தை பயன்படுத்திக்கொண்டு அந்தப் பணியை இளைஞர்களாக இருக்கக்கூடிய ஒவ்வொருவரும் ஈடுபடவேண்டும் என்று நான் உங்களை எல்லாம் கேட்டுக்கொள்ள கடமைபட்டிருக்கிறேன்.

ஒரு பயிர்வாழ அதற்கு பருவமாற்றங்கள் தேவைப்படுகிறது. அதைபோல நம்முடைய வளர்ச்சிக்கும் பல மாற்றங்கள் தேவை. தொழில்நுட்பம் இன்றைக்கு ஒரு மிகப் பெரிய மாற்றத்தை நம்முடைய நாட்டிலே உருவாக்கி யிருக்கிறது. மக்களுடைய எதிர்பார்ப்புக்கள் இன்றைக்கு மாற்றத்தை விரும்புகிறது. அதிலும் குறிப்பாக நம்முடைய தமிழகத்தில் இருக்கக்கூடிய மக்கள் அரசியலில் ஒரு மிகப் பெரிய மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

எனவே உங்களையெல்லாம் நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். ஊர், ஊராகச் செல்வோம். தெருத் தெருவாகச் செல்வோம். பகுதி பகுதியாகச் செல்வோம். வீடு, வீடாகச் செல்வோம். நம்முடைய பயணங்கள் முடிவதில்லை. அதைபோல நம்முடைய பணிகள் முடிவதில்லை. முயற்சிகள் என்றைக்கும் தோற்றதில்லை. உண்மைகள் என்றைக்கும் பொய்த்ததுஇல்லை. எனவே நம்முடைய கடமைகளும் என்றைக்கும் நிற்பதில்லை என்ற அந்த உணர்வோடு நாம் உறுதி எடுப்போம். சபதம் ஏற்போம். இந்த மார்ச் 1 ஆம் தேதியை இளைஞர் எழுச்சி நாளாக மட்டுமல்ல, பாகுபாடு ஒழிப்பு தினமாகவும் நாம் இன்றைக்கு இதை நடத்துகிறோம் என்பதை மனதில் வைத்துக்கொண்டு ரத்ததானம் வழங்குவதற்கு அனைவரும் உறுதி எடுப்போம். சபதம் ஏற்போம். இதுதான் என்னுடைய பிறந்த நாள் செய்தியாக - வாழ்த்து சொல்ல வந்திருக்கக்கூடிய உங்கள் அனைவருக்கும் இந்த நேரத்திலே தெரிவித்துக்கொண்டு உங்கள் அனைவருக்கும் நான் மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லி என்னுடைய உரையை இந்த அளவில் நிறைவு செய்கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.