சனி, 7 மார்ச், 2015

நெஞ்சை நிமிர்த்திச் சொல்ல நமக்கு உரிமை உண்டு. மகளிர் தினச்செய்தி

ஆண்களுக்கு இணையான சமத்துவம் நிலவச் செய்திட உலக மகளிர் நாளில் உறுதியேற்போம்: கலைஞர்

திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள உலக மகளிர் நாள் வாழ்த்துச் செய்தியில்,

இன்று உலக மகளிர் நாள்!

19ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் முதலிய ஐரோப்பிய நாடுகளிலும், பின்னர் அமெரிக்காவிலும்,ரஷ்யாவிலும் ஆயிரக்கணக்கில் மகளிர் திரண்டு தங்கள் ஊதிய உயர்வு, எட்டுமணிநேர வேலை, வாக்களிக்கும் உரிமை முதலியவற்றை வலியுறுத்திக் கிளர்ந்தெழுந்து போராடினர். அப்போராட்டங்களின் ஒருகட்டத்தில் பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க் என்னும் மன்னன் பெண்களை அரசவை ஆலோசனை குழுக்களில் இடம்பெறச் செய்யவும், பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848ஆம் ஆண்டின் மார்ச்சுத் திங்கள் 8ஆம் நாள்! பின்னர் அந்நாளே, “உலக மகளிர் நாள்”  என ஆண்டுதோறும் உலகெங்கும் கடைப்பிடிக்கப்பட்டு, மகளிர் மேம்பாடு குறித்த திட்டங்கள் உருவெடுக்கத் தொடங்கின.

தமிழகத்தில் 1967ஆம் ஆண்டிலும், அதன் பின்னரும் அமைந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு, மகளிர் சமுதாய மேன்மைக்கு மகத்தான பல சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றி நடைமுறைப்படுத்தியது. அதன் விளைவாகத்தான் இன்று எங்கும் - எல்லா அலுவலகங் களிலும், எல்லாத் துறைகளிலும், எல்லாக் கலைகளிலும் பெண்கள் பங்குபெற்றுப் பயனடைந்து முன்னேற்றம் கண்டு சாதனைகள் பல படைத்துப் பெருமைகளைக் குவித்து வருகிறார்கள் என்பதனை எவராலும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது. 

இந்தியாவிலேயே முதன்முறையாக அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கிடும் திட்டம்! பெண்களுக்குச் சம சொத்துரிமை வழங்கிட தனிச் சட்டம்! உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் திட்டம்! காவல்துறையில் பெண்களைக் காவலர்களாக நியமனம் செய்யும் திட்டம்! விதவை மகளிர் திருமண நிதி உதவித் திட்டம்! 10ஆம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு மூவலூர் மூதாட்டியார் பெயரில் திருமண நிதியுதவித் திட்டம்! ஏழைப் பெண்கள் உயர் கல்வி பயில ஈ.வெ.ரா. நாகம்மையார் நினைவு மகளிர் இலவசப் பட்டப்படிப்புத் திட்டம்; பின்னர் பட்ட மேற்படிப்பு நீட்டிப்பு! ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆறாயிரம் ரூபாய் நிதியுதவி நல்கும் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம்! விதவைப் பெண்களுக்கும், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கும் 18 வயதிற்கு மேற்பட்ட மகன் இருந்தாலும் உதவித் தொகை வழங்கும் திட்டம்! இலட்சக்கணக்கான மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உருவாக வழிவகுக்கப்பட்ட மகளிர் திட்டம்!

அரசு உருவாக்கிடும் தொழில் மனைகளில் 10 சதவீத மனைகளைப் பெண் தொழில் முனைவோருக்கு ஒதுக்கீடு செய்யும் திட்டம்! திருக்கோயில்களில் செயல்படும் அறங்காவலர் குழுக்களில் மகளிர் ஒருவரை அறங்காவலராக நியமிக்க வகை செய்யும் சட்டம்! மகளிர் சிறு வணிகக் கடன் திட்டம்! ஏழைத் தாய்மார்கள் மனம் குளிர இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் திட்டம்! எரிவாயு இணைப்புடன் இலவச எரிவாயு இலவச அடுப்புகள் வழங்கும் திட்டம்! ஆதிதிராவிட மகளிர்க்கு விமானப் பணிப் பெண் பயிற்சி வழங்கும் திட்டம்! ஐம்பது வயது கடந்தும் திருமணமாகாமல், உழைத்து வாழ முடியாத சூழலில் வாழும் ஏழைப் பெண்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கும் திட்டம்! இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட சத்துணவுத் திட்டப் பணியாளர்கள் பயன்பெற காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்கும் திட்டம்! அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கூடுதல் மருத்துவர்களும், செவிலியர்களும் நியமிக்கப்பட்டு, கிராமப்புற மகளிர்க்கு 24 மணிநேர மருத்துவச் சேவை அளிக்கும் திட்டம்!– 

எனப் பல்வேறு திட்டங்களையும், சட்டங்களையும் நிறைவேற்றி, அரசுத் துறைகளிலும், அரசியல் களங்களிலும், தொழில் முறைகளிலும் பெண்கள் முன்னேற்றத்திற்குத் தேவையான அடித்தளங்கள் பலவற்றை வலுவாக அமைத்துத்தந்துள்ளது திராவிட முன்னேற்றக் கழகமே என்பதனை



நெஞ்சை நிமிர்த்திச் சொல்ல நமக்கு உரிமை உண்டு.

ஆனால், 2011க்குப் பிறகு, எங்கு நோக்கினும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்கதையாகி, பெண்கள் பாதுகாப்பின்றிப் பல வழிகளிலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதனை இவ்வேளையில் வேதனையுடன் நினைவுகூரும் நிலை தமிழகத்தில் நிலவுகிறது. மனித குலத்தின் மகத்தான சக்திகளில் ஒன்றாகத் திகழும் மகளிர்க்கு எதிரான இத்தகைய கொடுமைகள் முற்றிலும் அகற்றப்பட - கழக அரசு காலத்தில் தொடங்கப்பட்ட பெண்கள் நலத் திட்டங்கள் தங்கு தடையின்றித் தொடர்ந்திட - எங்கும் எதிலும் ஆண்களுக்கு இணையான சமத்துவம் நிலவச் செய்திட உலக மகளிர் நாளில்  உறுதியேற்போம்! தமிழக மகளிர் அனைவர்க்கும் “உலக மகளிர் நாள்” நல்வாழ்த்துகளை உரித்தாக்குவோம்! இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக