வியாழன், 2 அக்டோபர், 2014

சீமானை தெரிந்து கொள்ளுங்கள்

சர்ச்சைக்குரிய லைக்கா மொபைல் நிறுவனம்,  ஈழவிடுதலைப் போராட்டம்,  தமிழகத்து நவீன அரசியல் பிரம்மாக்கள் ,  இப்படி ஒரு சுற்றுவட்டத்தில் தமிழக அரசியல் அரங்கு இப்போதைக்கு சிக்கியிருக்கிறது. 
அதையொட்டிய வாதப்பிரதிவாதங்களும் நியாயப்படுத்தல்களும்  மேடையேற்றப்பட்டு சிலநாட்களாக சூடுபிடித்த சொற்பொழிவுகளாக அனல்பறக்க விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் நிழலில் நின்று கழுத்து நரம்பு வெடிக்குமளவுக்கு முழங்கித்தள்ளிய சீமானும், அவருடைய நாம்தமிழர் கட்சியும் என்பதே மிக மிக வருத்தத்திற்குரியதாக பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து தமிழகத்து அரசியல்வாதிகளால் நிர்வாணமாக்கப்பட்ட ஈழ தேசிய அரசியல்,   நம்பிக்கைக்குரியவராக பார்க்கப்பட்ட சீமானால் மீண்டும் ஒரு தாக்குதலை சந்தித்திருக்கிறது. சீமான் தெரிந்து இந்த குளப்பத்துக்குள் கலந்துவிட்டாரா அல்லது அவசரமான முடிவெடுப்பினால் சிக்கலில் சிக்கிவிட்டாரா, அல்லது அதையும் தாண்டி முகத்துக்கு அஞ்சி சில விடயங்களை நியாயப்படுத்தவேண்டிய இக்கட்டில் சிக்கியிருக்கிறாரா என்பது நிச்சியம் காலப்போக்கில் புரியப்படும் என்பது வரலாற்றில் நாம் கண்கூடாக கண்ட உண்மை.

உலகத்தமிழர்களின் மிகப்பெரிய ஆதரவை பெற்ற ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு  ஆதரவு தெரிவித்து களம் இறங்கிய சீமான் 2009,ல் இருந்து 2011,வரை தனது அரசியல் அந்தஸ்த்துக்காக அதிகம் சிரமப்படாத காலமாக இருந்தது. 

ஐந்து சிறைவாசம், அறுநூறுக்கு மேற்பட்ட மக்களை கூட்டாமல் மக்கள் இணைந்துகொண்ட மேடைகள்,  சலிப்படையவைக்கக்கூடிய காங்கிரஸ் மற்றும் திராவிட கட்சிகளின் வஞ்சகத்தனமான அரசியலால் வெறுப்படைந்த மாற்றுக்கருத்துக்கொண்ட பொதுமக்களின் இணைவு ஆகியவற்றுடன்  ஈழத்தின் இனப்படுகொலை அனுதாபமும்  சீமானுக்கு சாதகமாகி மிக குறுகிய காலத்தில் அவரை ஒரு தனித்தன்மை கொண்ட உறுதிமிக்க அரசியல்வாதியாக உலக தமிழினத்தின் முன் வளர்த்துவிட்டிருந்தது.

1940 களில் தினத்தந்தி பத்திரிகை ஸ்தாபகரான சி பா ஆதித்தனாரால் தொடங்கப்பட்டு முடங்கிக்கிடந்த "நாம்தமிழர்" என்ற இயக்கத்தை சரியான சந்தர்ப்பத்தில் சீமான் கையிலெடுத்து அதில் புலித்தோல் ஒன்றையும் விரித்து சம்மணமிட்டு இதமாக உட்கார்ந்துகொண்டார். உட்கார்ந்தது மட்டுமல்லாமல் புரட்சிகரமான சில வேலைத்திட்டங்களையும் பரப்புரைகளையும் அவர் மேற்கொண்டார்.

2009,ல் முள்ளிவாய்க்கால் உச்ச இன அழிப்பின்போது  சோனியாவின் இந்திய தேசிய காங்கிரஸுடன் இணைந்து அன்றைய தமிழக முதலமைச்சர் மு கருணாநிதி ஆடிய சதிராட்டம் மக்களை வெறுப்பின் உச்சத்துக்கு கோண்டுசென்று  உணர்வாளர்கள் தெருத்தெருவாக தீக்குளித்து உயிரை மாய்த்து தமது எதிர்ப்பை பதிவுசெய்யுமளவுக்கு கீழ்த்தரமாக மாற்றம்பெற்றிருந்தது.அப்போது பற்றிப்பிடிக்க அலைபாய்ந்த ஈழ ஆதரவுக் கைகளுக்கு படர் கொம்பாக சீமானின் அரசியற் பிரவேசம் வரப்பிரசாதமாக அமையப்பெற்றிருந்தது.

35/40 வருட ஈழப்போராட்டம் 2009,ல் முள்ளிவாய்க்காலில் பின்னடைவை சந்தித்து போராட்டம் நிறுத்தப்பட்டபோது.  தமிழகத்திலிருந்து பல்வேறு அமைப்புக்களுடன் சீமானும் ஈழ ஆதரவுக்காக குரல் கொடுக்கத்தொடங்கியிருந்தார்.  ஈழத்தில் போராட்டத்தலைமையின் வெற்றிடம் உணர்வுமயமாக பேசத்தெரிந்த சீமானுக்கு சாதகமாக அமைந்தது.

இனப்படுகொலையின்போது சர்வதேசத்தை தலையிடாமல் தந்திரமாக சதிசெய்து தடுத்த இந்தியாவின் சதி,  ராஜபக்‌ஷவுக்கு முண்டு கொடுத்து அரசியல் செய்த இந்திய தமிழக அரசியற் கட்சிகள் மீதிருந்த வெறுப்பு,  கொள்கையில் விடுதலைப்புலிகள் தலைவரின் சார்புத்தன்மை புலிக்கொடியின் கவர்ச்சி சீமானின் உணர்வுமயமான பேச்சு இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து விடுதலைப்புலிகளின் மாற்றாக தமிழகத்து கிராமிய இளைஞர்கள் மத்தியில் நாம்தமிழர் இயக்கம் ஒரு பலமான சக்தியாக தலையெடுத்தது.
விடுதலைப்புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் நடத்தை,   மற்றும் தேசியத்தலைவரின் உறுதியான கொள்கையை பின்பற்றுவதாக சீமான் முழங்கிய வீச்சு தேசியத்தலைவரின் உருவப்பதாதைகளை பொலீசாருக்கும் பயப்படாமல்  நாம்தமிழர்கட்சியின் மேடைகளில் அலங்கரித்தபோது  தமிழகம் எங்கும் சீமானுக்கு மிகப்பெரிய வரவேற்பும் ஒரு ஈழவிடுதலை போராளிக்கான அங்கீகாரமும் கிடைத்து.  மிகப்பெரிய மரியாதையையும் நாம்தமிழர் கட்சி பெற்றுக்கொண்டது.

நாளடைவில் நாம்தமிழர் இயக்கம் அரசியற்கட்சியாக மாற்றப்பட்டு வாக்கு அரசியல்,  முதலமைச்சர் நாற்காலி என்ற எதிர்பார்ப்புக்கள் என்று எப்போ பேசத் தொடங்கியதோ அன்றே தமிழ்நாட்டின் பாரம்பரிய அரசியற் கட்சிகளின் கொள்கையை சீமானும் நாம்தமிழர் இயக்கமும் பின்பற்றத்தொடங்கிவிட்டனர் என்ற ஐயம் கலந்த சோர்வுடன் ஒரு தொய்வும் பின்தொடர்ந்து வந்தது.

கட்சிக்குள் இடம்பெற்ற பதவியை பிடிப்பதற்கான கொள்கை மாற்றத்தால் சிலவிடயங்களில் சமரசம் செய்யவேண்டிய கட்டாயங்களும் விட்டுக்கொடுப்புக்களும் வெளியில் இருப்பவர்கள் அவதானிக்கமாட்டார்கள் என்று சீமான் நினைத்தாலும் பார்வையாளர்கள் மத்தியில் நாம்தமிழர் கட்சியின்  நடவடிக்கைகள் சமிபகாலமாக தொடர்ந்து உணரப்பட்டே வந்தன.

தமிழக அரசியலில் ஒரு வித்தியாசமான போக்கை பின்பற்றிவந்த சீமான் தேசியத்தலைவரின் உறுதியான கொள்கையை விட்டு நழுவி மெல்ல மெல்ல திராவிடகட்சிகளின் கொள்கையை பின்பற்றத்தொடங்கினார். அப்போகூட சீமானை ஒரு சராசரி அரசியல்வாதியாக உருவகப்படுத்த அதிகமான ஊடகங்கள் விரும்பவில்லை.

2010, ம் ஆண்டு ஈழ ஆதரவு இயக்கமாக தொடங்கப்பட்ட நாம்தமிழர் இயக்கம் 2014 ஒகஸ்டில் நான்கு ஆண்டுகளை பூர்த்திசெய்து ஈழத்தமிழர்கள் மத்தியில் மிகப்பெரிய சந்தேகத்துக்குரிய கட்சியாக கேள்விக்குறிக்குள்ளாகியிருக்கிறது.

ஆனாலும் தமிழ்நாட்டில் அக்கட்சி உடனடியாக காணாமல்போய்விடும் என்று எவரும் சொல்லிவிட முடியாது ஏனெனில் ஈழ ஆதரவுப்போக்கை ஆரம்பத்தில் கடைப்பிடித்து அரசியல் செய்துவந்த கருணாநிதியின் திமுக, ராமதாஸின் பாமக, திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் இன்று சீமான் நியாயப்படுத்தும் அதேபோன்ற நியாயப்படுத்தல்களையே கொள்கையாக்கி அரசியல் செய்து வருகின்றன எனவே சீமானின் நாம்தமிழர் கட்சியும் இவர்களுடன் கூட்டுச்சேர்ந்து சராசரி அரசியலில் ஈடுபட்டு கரையேறக்கூடும்.    ஆனால் முன்னர் உள்ளதுபோன்று மக்களின் உணர்வுமயமான ஆதரவும் மதிப்பு மரியாதையும் தொடர்ந்து சீமானுக்கு இருக்கும் என்பது சந்தேகமே.

இப்போ நாம்தமிழர் கட்சி தொன்மையான திராவிடக் கட்சிகள்போன்று தமிழ்நாட்டுக்கான அரசியற் கட்சிகளின் பண்பாட்டு குணாம்ஷங்களை பகிரங்கமாக வெளிப்படுத்தி அரசியல் செய்யத்தொடங்கியிருக்கிறது. காலப்போக்கில் கருணாநிதி ஜெயலலிதா திருமா ராமதாஸ் ஆகியோரது வரிசையில் சீமானும் இணைந்து கொள்ளுவார் என்பதில் எவரும் ஐயப்படத்தேவையில்லை.

ஆனாலும் சீமான் தான் கொண்ட ஆரம்ப  கொள்கையில் இருந்து மாறிவிடவில்லை என்று காட்டிக்கொள்ளுவதற்காக மிகப்பிரயத்தனப்படுவதாகவே தெரிகிறது, இருந்தும் சீமானின் நியாயப்படுத்தல்களில்  ஒன்றிரண்டு ஏற்றுக்கொள்ளக்கூடியவையே. அந்த ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயங்களை வைத்து அனைத்து தவறுகளையும் நியாயப்படுத்த முனைவது எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

நேற்று மாலை RED PIX  தமிழ் நியூஸ் ஊடகத்தின்மூலம் தன்னிலை விளக்கம் ஒன்றை நேர்காணல்போல தயாரித்து சீமான் வெளியிட்டுள்ளார். அந்த நேர்காணலில் சீமான் தன்னை நியாயப்படுத்துவதை விடவும் பாரிவேந்தர் என்கிற பச்சைமுத்துவையும்,   லைக்காவின் உரிமையாளர்களில் ஒருவரான சுபாஸ்கரனையும்,  ராஜபக்‌ஷவையும் நியாயப்படுத்துவதிலேயே அதிக அக்கறை செலுத்தினார்.

லைக்கா மொபைல் சுபாஸ்கரனுக்கு சினிமா எடுத்துத்தான் வாழவேண்டுமென்ற அளவுக்கு அவர் இல்லை என்று மிகப்பெரிய நற்சன்றையும் நேர்காணலின்போது சுபாஸ்கரனுக்கு சீமான் வழங்கியிருந்தார்.

பாரிவேந்தர் பச்சைமுத்து ஒன்றிரண்டு வறிய மாணவர்களுக்கு இலவசகல்வி அளிப்பது உண்மைதான்,  மறுப்பதற்கில்லை  அதற்காக நாற்பதுவருடகால போராட்ட வரலாற்றை கொச்சைப்படுத்தும் விதமாக வரலாற்றை திரித்து ஆவணப்படுத்தி விடுதலைப்போராட்டத்தையும் தேசியத்தலைவரின் கொள்கையையும் எழுந்தமானத்தில் சித்தரித்து சேறடிக்கும் "புலிப்பார்வை"  என்ற திரைப்படத்தை  எவராலும் அனுமதிக்க முடியாது. அப்படித்தான் இல்லாமல் அந்த திரைப்படம் தடுக்க முடியாமல் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி  ஆட்சியாளர்களின் உதவியுடன் வெளியிடப்பட்டாலும் அந்த திரைப்படத்துக்கான முழு எதிப்பை / புறக்கணிப்பை பதிவுசெய்யவேண்டிய வரலாற்று கடமை அனைவருக்கும் உண்டு. 

அந்த யதார்த்தத்தை உணர்ந்துகொண்டதால்த்தான் இன்றைக்கு ஐம்பதுக்கு மேற்ப்பட்ட தமிழக பொது அமைப்புக்கள் புலிப்பாரவைக்கு எதிராக போராட களத்தில் இறங்கியிருக்கின்றன.

ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து விடுதலையையை எதிர்நோக்கி போராடும் அனுபவம் வாய்ந்த ஒரு தலைவன்  எதிரே காணப்படும் தடையை அல்லது துரோக செயற்பாட்டை நேரடியாக (இப்படியான ஒரு)  களத்தில் சந்திக்கும்போது கொள்கையை விட்டு விலகாமல் முகங்கொடுத்து எதிர்த்து நிற்பதுதான்   உலகத்தில் தோன்றிய விடுதலை போராட்ட மரபாளிகளின் அடிப்படை தத்துவமாக இருந்து வருகிறது.  இங்கு மக்கள் உணர்வுகளை புறந்தள்ளி தலைவனும் துரோகிகளும் குளிர்சாதன அறைகளில் ஒன்றுகூடி முகத்துக்கஞ்சி திருத்தங்கள் சமரசம் விட்டுக்கொடுப்பு போன்ற பொறிகளில் சிக்கிவிட்டால் போராட்டமே அழிந்துபோகும் சூழல் உருவாகிவிடும்,

தலைவனின் உறுதியும் நேர்மையும் மட்டுமே இப்படிப்பட்ட போராடங்களில் தொண்டர்களினதும் மக்களினதும் மூலதனமாக கணிக்கப்படுவதுண்டு. தலைவனின் உறுதியற்ற தன்மை தொண்டர்களையும் வெகுஜனத்தையும் இழக்கவேண்டிய மிகப்பெரிய இக்கட்டில் கொண்டுசென்று சேர்க்கும் என்பதை அனுபவசாலிகள் தவிர சீமான் போன்ற சாதாரனமானவர்களால் உணரமுடியாது.

தலைவர் பிரபாகரன் அவர்கள் சீமானிடம் போராட்டம் பற்றிய திரைப்படங்களை எடுத்து விடுதலையை வென்றுதரும்படி கேட்டதாக சீமான் ஒரு நியாயப்படுத்தல் மேடையில் பேசியிருந்தார்,  அதற்கு சரியான படங்களை பச்சமுத்துவை வைத்து புலிப்பார்வையும்,  லைக்காவின் முதலீட்டில் விஜயை வைத்து கத்தியும் எடுக்கப்பட்டிருக்கிறது.

தலைவர் பிரபாகரன் சினிமாமூலம் விடுதலையை வென்றுவிடலாம் என்று நம்பியிருந்தால் துப்பாக்கி தூக்கி போராடிய நாற்பது வருடங்களில் துப்பாக்கிகளை தூக்கி வீசிவிட்டு ஒரு 400 சினிமாப்படங்களை எடுத்து விடுதலையை வென்றிருக்கலாம் துரதிர்ஷ்டமாக அது அடக்காமல் போய்விட்டது.

லைக்கா பற்றிய பின்னணி பற்றி எவரும் முன்கூட்டி தெரிவிக்காததால் 80 சதவீதம் எடுக்கப்பட்ட கத்தி திரைப்படம் தம்பி விஜய்க்காகவும் தம்பி முருகதாஸுக்காகவும்  லைக்காவின் சொத்தான கத்தி திரைப்படத்தை தடைசெய்ய முடியாது என்றும் , எந்த கலந்துரையாடல் மற்றும் சம்பந்தப்பட்ட சமூகத்தின் விருப்பு வெறுப்பு அவர்களது பண்பாடு கலாச்சாரம் போன்றவற்றை அறியாமல் பணமும் அடியாட்களும் அரசியல்ச்செல்வாக்கும் இருக்கின்றதென்ற மமதையில் பாலச்சந்திரனை பயங்கரவாதியாக சித்தரித்து எடுக்கப்பட்ட  புலிப்பார்வை திரைப்படம் பச்சைமுத்து என்ற ஒரு தனிமனிதருக்காக  திருத்தம் செய்து வெளியிடப்படும் என்று சீமான் தனது நேர்காணலில் சர்வ சாதாரணமாக சொல்லி முடித்துவிட்டார்.

ஒருநாள் தமிழீழப்பயணத்தை பாதுகாப்புடன் மேற்கொண்டு தேசியத்தலைவருடன் ஒரு படம் எடுத்து விடுதலைப்புலிகளின் ஒருசில பாசறைகளை பார்த்து திரும்பிய சீமான் விடுதலைப்போராட்டத்தைப்பற்றி  தம்பி பாலச்சந்திரன் பற்றி இவ்வளவு சூழுரைக்கிறார் என்றால் அந்த மண்ணில் பிறந்து ஒவ்வொரு அடி மண்ணையும் காலால் அளந்து நடந்து, ஒவ்வொரு போராளியுடனும் ஒவ்வொரு பொழுதை கழித்து,   பல இலட்சம் குண்டுகளை எதிர்கொண்டு,  குடிநீரின்றி உணவின்றி ஆயிரம் இடப்பெயர்வுகளை சந்தித்து,  பதுங்கு குழியில் பகலிரவாய் கிடந்து,  இராணுவ சிறையில் சித்திரவதைப் பட்டு கை கால் இழந்து முள்ளிவாய்க்காலை முற்றாக தரிசித்து,  தாய் தந்தை உடன்பிறப்புக்கள் மனைவி கணவன் பிள்ளைகள் என்று எல்லாவற்றையும் இழந்து உயிர் ஒன்றுதான் மிச்சம் என்று நிர்க்கதியாக நிற்கும் ஒருவரின் குமுறல் எப்படியிருக்கும் என்பதை சீமான் மானசீகமாக புரிந்துகொள்ளவேண்டும் என்றே இந்தப் பதிவு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகின்றது,

இன்னுமொரு விடயத்தை இங்கு வெளிப்படுத்தவேண்டிய சமூகப்பொறுப்பு இருப்பதால் அவைகளும் இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது.

கேபி எனப்படும் பத்மநாதன் என்பவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்த ஒருவர் என்பது அனைவரும் அறிவர் அவர் தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் மிக நெருக்கமான நண்பராகவும் இருந்தவர். இன்று ஶ்ரீலங்கா அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு ராஜபக்‌ஷவின் சகோதரர் கோத்தபாயவின் ஒற்றராக செயற்பட்டு வருகிறார்.

பத்மநாதன் தலைவர் பிரபாகரனின் நண்பராக இருந்தவர் என்பதால் அவரது  இன்றைய செயற்பாடுகளை மக்கள் வரவேற்கவேண்டும் என்று கட்டாயம் இல்லை ,  லைக்காவுக்கும் பத்மநாதனுக்கும் தொடர்பு உண்டு.  அதேபோல எவராக இருந்தாலும் அது சீமானாக இருந்தாலும் கொள்கைரீதியாக அவர்கள் புறக்கணிக்கப்படுவர் என்பதே யதார்த்தம்.

சர்வதேச அரசியல் இலாபத்திற்காக இன்று கேபி கிளிநொச்சியில் அரசாங்க கட்டுப்பாட்டிலுள்ள ஒரு அறக்கட்டளையின் தலைவராக சிறீலங்கா ஜனாதிபதி ராஜபக்‌ஷ்வினால் நியமிக்கப்பட்டு செயற்பட்டு வருகிறார்.

கேபியை எந்த பத்திரிகையோ ஊடகமோ நேரடியாக அணுகி பேட்டி எடுத்துவிட முடியாது.  ராஜபக்‌ஷவின் அரசாங்கத்தில் மத்திய அமைச்சராக பதவி வகிக்கும் டக்ளஸ் தேவானந்தா இலங்கையில் "தினமுரசு" என்கின்ற பத்திரிகையை நடத்திவருகிறார் அப்பத்திரிகை அமெரிக்கா கனடா, ஐரோப்பிய நாடுகள் அனைத்துக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது, அப்பேற்பட்ட அமைச்சரின் பத்திரிகை கேபியை நேர்காணல் ஒன்று நடத்த விரும்பியபோது கோத்தபாயவிடம் அனுமதி பெற்று அவர் தொலைபேசிமூலம் அனுமதி அளித்ததன் பின்னரே நேர்காணலுக்கு சமூகமளிக்கமுடியும் என்று கேபி தரப்பால் சொல்லப்பட்டிருக்கிறது'

அதே கேபியை தமிழகத்திலுள்ள பாரிவேந்தர் பச்சைமுத்துவின் "புதியதலைமுறை" தொலைக்காட்சி சென்ற ஆண்டு நேரில்ச்சென்று சர்வ சாதாரணமாக நேர்காணல் ஒன்றை நடத்தி ஒளிபரப்பியது.

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு பாலச்சந்திரனுக்கு இரங்கல் கவிதை எழுதி சினிமாபடம் எடுக்கும் கொள்கை கொண்ட பச்சைமுத்துவின் தொலைக்காட்சி கிளிநொச்சிக்கு சென்று நேர்காணல் நடத்த ஶ்ரீலங்கா இராணுவப்புலனாய்வாளர்கள் சாதாரணமாக விட்டு விடுவார்களா? என்பதையும் சீமான் விளங்கப்படுத்தவேண்டும்.

அதுமட்டுமன்றி பச்சமுத்துவின் எம் ஆர் எம் பல்கலைக்கழகம் ஶ்ரீலங்கா அரசாங்கத்தின் அனுமதியுடன் இலங்கையில் மிகப்பெரிய கலைக்கல்லூரியை நடத்தி வருகிறது.  இறுதியாக கிடைத்த செய்திகளின்படி டக்ளஸ்தேவானந்தாவின் ஆதரவுடன் எம் ஆர் எம் கல்விக்குழுமம் யாழ்ப்பாணத்தில் ஒரு கல்லூரியையும் கேபி எனப்படும் பத்மநாதனின் ஆதரவுடன் கிளிநொச்சியில் ஒரு கல்லூரியையும் விரைவில் நிறுவ இருப்பதாக நம்பகமான செய்திலள் தெரிவிக்கின்றன.

பாரிவேந்தர் எனப்படும் பச்சைமுத்து விடுதலைபோராட்டத்துக்கு ஆதரவு தரவேண்டாம். அவர் தமிழர்களின் ஆதரவாளரா அல்லது ராஜபக்‌ஷ்வின் நண்பரா என்பதையும் சீமான் அறிந்துகொண்டால் அடுத்த மேடையில் பேசுவதற்கு கருப்பொருளாக இருக்கும்.

 
நன்றி ................ஈழதேசம் செய்திகளுக்காக.

கனகதரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக