புதன், 24 செப்டம்பர், 2014

உள்ளாட்சி இடைத்தேர்தலில் வென்றது ஜனநாயகமா?

உள்ளாட்சி இடைத்தேர்தலில் வென்றது ஜனநாயகமா? பணநாயகமா? பட்டாசும், இனிப்பும் ஒரு கேடா? கலைஞர் கண்டனம்!
 
தி.மு.க. தலைவர் கலைஞர் 23.09.2014 செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் உள்ளாட்சி மன்றங்களுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று, முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்து முடித்து, எதிர்பார்த்தபடி அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. ஆகா! அந்தத் தேர்தலில் தான் ஜனநாயகம் எந்த எந்த அளவுக்குக் கொடி கட்டிப் பட்டொளி வீசிப் பறந்தது தெரியுமா? அது பற்றி ஏடுகளில் எல்லாம் எப்படியெப்படி செய்திகள் வந்தன தெரியுமா? நானே அது பற்றி இரண்டு மூன்று முறை கருத்து தெரிவித்திருக்கிறேன். “துஷ்டரைக் கண்டால் தூர விலகு” என்பது பழமொழி. அதுபோல அ.தி.மு.க. ஆட்சியில் இடைத் தேர்தல் என்றால், தமிழகத்திலே உள்ள முக்கிய எதிர்க்கட்சிகள் எல்லாம், “அதைப்பற்றி எங்களுக்கு என்ன?” என்பதைப் போல, சர்வாதிகாரச் சதிராட்டங்களும், அராஜகச் சேட்டைகளும் எங்கணும் அரங்கேறும் எனச் சரியாக யூகித்தே தேர்தலையே புறக்கணித்து விட்டார்கள். குறிப்பாக தி.மு.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இந்தத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி விட்டன. காரணம் அவர்களுக்கெல்லாம் அ.தி.மு.க. வினர் இடைத் தேர்தல்களில் என்னென்ன திருகுதாளங்களில் ஈடுபடுவார்கள் என்பது முன்பே தெரிந்திருந்தது. முதலில் தேர்தல் தேதியே தேர்தல் ஆணையத்தால் முறையாக அறிவிக்கப்பட்டதா? 

செப்டம்பர் 18ஆம் தேதி உள்ளாட்சி மன்றங் களுக்கான இடைத் தேர்தல்கள் நடைபெறுமென்று ஆகஸ்ட் 6ஆம் தேதியன்று தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. ஆனால் என்ன காரணத்தாலோ அறிவிக்கப்பட்ட அன்றைய தினமே, அதே தேர்தல் ஆணையம் தேர்தல் பற்றிய தனது அறிவிப்பினைத் திரும்பப் பெற்றது! பிறகு 22 நாட்கள் கழித்து, ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம், உள்ளாட்சி மன்ற இடைத் தேர்தலுக்கான அறிவிப்பினைச் செய்தது. 22 நாட்கள் கழித்து, தேர்தல் தேதியை அறிவித்த போது, ஏற்கனவே அறிவித்த தேதியையும் மாற்றி அல்லவா அறிவிக்க வேண்டும்! ஆனால் அப்படி அறிவிக்க வில்லை. மாறாக ஏற்கனவே அறிவித்த செப்டம்பர் 18ஆம் தேதியன்று தேர்தல் நடைபெறும் என்றுதான் அறிவித்தார்கள்! எங்கேயாவது, எந்தத் தேர்த லிலாவது எடுத்த எடுப்பிலேயே இப்படிப்பட்ட கோமாளித்தனங்கள் நடைபெற்றிருக்கின்றனவா? ஏன் இவ்வாறு தேதியை மாற்றாமல் அதே தேதியை அறிவித்தார்கள் என்றால் அந்த நாள் தான் முதலமைச்சருக்கு “ராசியான” நாளாம்! 

இறுதியாக இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சியை எதிர்த்து பா.ஜ.க.வும், கம்யூனிஸ்ட் கட்சிகளுமே போட்டியிட முன் வந்து, வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தார்கள். ஆனால் அவர்களையாவது இந்தத் தேர்தலில் ஜனநாயக ரீதியாகப் போட்டியிட ஆளுங் கட்சியினர் அனுமதித்தார்களா? இதோ ஒன்றிரண்டு உதாரணங்கள்! 

மூன்று இடங்களில் மேயர் பதவிக்கான தேர்தல்! நெல்லை, தூத்துக்குடி, கோவை மாநகராட்சிகளில் மேயர் பதவிக்கான தேர்தல். இதில் ஒரு இடத்தில், அதாவது நெல்லையில் தேர்தலே நடைபெறாத அளவுக்கு செய்துவிட்டார்கள். எப்படித் தெரியுமா? ஆளுங்கட்சிக்கு எதிராக யார் யார் வேட்பு மனு தாக்கல் செய்தார்களோ, அவர்களில் பலருடைய வேட்பு மனுக்களை அது சரியில்லை, இது சரியில்லை என்று நொண்டிக் காரணம் கூறித் தள்ளுபடி செய்து விட்டார்கள். தள்ளுபடி செய்யப்பட முடியாதவர்களையெல்லாம் சரிக்கட்டி, செய்ய வேண்டியதைச் செய்து, சொல்ல வேண்டியதைச் சொல்லி, எதிர்த்த வேட்பு மனுக்களையெல்லாம் வாபஸ் பெறச் செய்துவிட்டார்கள். முக்கியமாக போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளரின் வேட்பு மனுவினையும் கடைசி நாளன்று வாபஸ் பெறச் செய்ததோடு, அந்த வேட்பாளரையே அ.தி.மு.க.விலே சேர்த்து விட்டார்கள்! இப்படிப்பட்ட முழு நீள நகைச்சுவைக் கூத்து நெல்லையிலே மட்டுமா நடைபெற்றது? 

செங்கல்பட்டு நகராட்சியில் 1வது வார்டு மற்றும் 6வது வார்டுக்கு இடைத் தேர்தல் நடந்தது. இதில் அ.தி.மு.க. வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர்களான தணிகைவேலு, பசியுல்லா ஆகியோர் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யவில்லை என்று கூறி வேட்பு மனுவைத் தள்ளுபடி செய்து நகராட்சி ஆணையரும், தேர்தல் அலுவலரு மான முத்து வெங்கடேஷ் உத்தரவிட்டிருக்கிறார். மேலும், அ.தி.மு.க.வைச் சேர்ந்த 2 வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாகவும் அறிவித்து சான்றிதழ்களையும் தந்து விட்டார். இதனை எதிர்த்து சுயேச்சை வேட்பாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி, தேர்தல் அதிகாரிகளை இதுபற்றி விசாரிக்க உத்தரவிட்டார். அதன்படி நடந்த விசாரணையில், நகராட்சி ஆணையர் சட்ட விரோதமாக வேட்பு மனுக்களைத் தள்ளுபடி செய்தது தெரிந்து, அது தொடர்பாக நீதிபதியிடம் அறிக்கை தரப்பட்டது. நீதிபதி அ.தி.மு.க. வேட்பாளர் களின் வெற்றி செல்லாது என்றும், மறு தேர்தல் நடத்தவும் உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக வேறு வழியின்றி தேர்தல் ஆணையம், தற்போது நகராட்சி ஆணையர் முத்து வெங்கடேசை 21-9-2014 அன்று “சஸ்பென்ட்” செய்துள்ளது. இந்த “சஸ்பென்ட்” நடவடிக்கை வெறும் கண் துடைப்பா? நீதிமன்றத்தை ஏமாற்றுவதற்காக மேடை ஏற்றப்பட்ட நாடகமா? என்பதெல்லாம் பிறகு வெளியேவரும்! 

கோவையிலே என்ன நடைபெற்றது தெரியுமா? 

கோவையில் பா.ஜ.க. வேட்பாளர் நந்தகுமார்! நெல்லையில் நடந்ததைப் போல அவர் வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு வேட்பு மனுவினை வாபஸ் பெற மறுத்து விட்டார். என்ன நடைபெற்றது? அவர் மீதே தாக்குதல் நடைபெற்றது. வாக்குப்பதிவுக்கு முதல் நாள் 17-9-2014 அன்று காலையில், கோவை மாநகராட்சியில் 65வது வார்டு சவுரிபாளையம் பகுதியில் அ.தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் தகவல் கேட்டு, பா.ஜ.க. வேட்பாளர் நந்தகுமார் தனது கட்சியினரோடு அங்கே சென்று வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற போடிபாளையம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பழனிசாமி உட்பட சிலரை கையும் களவுமாகப் பிடித்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக் கிறார்கள். அந்தத் தகவல் அறிந்ததும், அ.தி.மு.க.வினர் நூறுக்கும் மேற்பட்டோர் அங்கே திரண்டு வந்து பா.ஜ.க. வேட்பாளரைத் தாக்கியிருக்கிறார்கள். பா.ஜ.க.வினர் தங்கள் வேட்பாளரைச் சுற்றி நின்று பாதுகாத்ததோடு, காருக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். ஆனால் அ.தி.மு.க.வினர் அந்தக் காரையும் முற்றுகையிட்டு, கார் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டிருக் கிறார்கள். நடைபெற்றதா இல்லையா? 

புதுக்கோட்டை நகர் மன்றத் தலைவர் பதவிக்கு பா.ஜ.க. சார்பிலும், கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் வேட்பு மனு தாக்கல் செய்யவே அனுமதிக்கவில்லை. அவர்கள் சாலை மறியல் போராட்டம் எல்லாம் நடத்தியும் பயனில்லை. எதிரிகளை வேட்பு மனு தாக்கல் செய்யவே விடாமல் தடுத்து விட்டு, அ.தி.மு.க. வெற்றி பெற்றதாக அறிவித்து விட்டார்கள். 

சென்னையிலே என்ன நிலை? சென்னை மாநகராட்சி வட்டம் 35இல் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் காலை 11 மணிக்கெல்லாம் அனைத்து வாக்குச் சாவடிகளையும் கைப்பற்றி விட்டார்கள். அங்கே ஆளுங்கட்சி வேட்பாளரை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் போட்டியிட்டார். அந்தக் கட்சியினர் தேர்தல் அதிகாரிகளிடம் முறையிட்டபோது, அவர்கள் தலையிட மறுத்து விட்டார்களாம். 

கடலூரில் நடைபெற்ற நகர்மன்றத் தேர்தலில், அ.தி.மு.க.வினர் தேர்தல் விதிமுறைகளை மீறி, வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி கள்ள வாக்குகளைப் போட்டனர் என்றும், எதிர்க்கட்சி முகவர்களை வெளியேற்றிக் கொலை மிரட்டல் விடுத்தனர் என்றும், எனவே கடலூர் நகர் மன்றத் தலைவர் பதவிக்கு மறு தேர்தல் நடத்த வேண்டுமென்றும் மாநிலத் தேர்தல் ஆணையர் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர் மன்றத் தலைவர் வேட்பாளர் மாதவன் மனுவே அளித்திருக்கிறார். 

இராமனாதபுரம் நகராட்சித் தலைவராக இருந்த சேகர் இறந்து விட்ட காரணத்தால் அங்கே இடைத் தேர்தல் நடைபெற்றது. ஆனால் நடைபெற்ற இடைத் தேர்தலில், இறந்து விட்ட அந்த நகர் மன்றத் தலைவரின் வாக்கையே பதிவு செய்திருக்கிறார்கள் என்றால் இதை விட மோசடி வேறு இருக்க முடியுமா? 

குறிப்பாக இந்த இடைத் தேர்தல்களில் வேட்பு மனு தாக்கல் செய்த 3,075 பேரில், 1,589 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன அல்லது வாபஸ் பெறச் செய்யப்பட்டிருக்கின்றன என்றால், எந்த அளவுக்குப் பெருவாரியாக முறைகேடுகள் நடைபெற் றுள்ளன என்பதற்கு வேறு ஆதாரங்கள் தேவையா என்ன? 

எதிர்க்கட்சிகளின் கைகளையும், கால்களையும் கட்டிப் போட்டு, வாய்ப் பூட்டும் போட்டுவிட்டு, தேர்தலை நடத்துவதாகக் கூறி அனைத்து மோசடி முறைகேடுகளிலும் ஈடுபட்டு வெற்றி பெற்றதாக மார்தட்டிக் கொள்வதற்குப் பெயரா வெற்றி? இப்படிப்பட்ட இழிவான வெற்றியைப் பெற வேண்டுமா என்ன? அதனால் தான் நடுநிலை ஏடான “கல்கி”யே மனம் வெதும்பி தலையங்கம் எழுதியுள்ளது. 

அதன் முக்கிய பகுதிகள் வருமாறு :- 

“தமிழகத்தில் நடைபெறும் உள்ளாட்சி இடைத் தேர்தல் எதிர்க் கட்சியினரிடமும் மக்கள் மனத்திலும் பெரும் அருவருப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட முறையே சரியில்லை என்று தமிழகத் தின் முக்கிய எதிர்க்கட்சிகளான தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க. ஆகியவை புறக்கணித்து விட்டன. மக்களின் மாற்றுக் கருத்துகளுக்கு இடமளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தேர்தல் களத்தில் குதித்தன பா.ஜ.க.வும், கம்யூனிஸ்ட் கட்சிகளும். ஆனால் பல இடங்களிலிருந்து வரும் செய்திகள் அவ்வளவு உவப்பாக இல்லை. மத்திய அமைச்சரான பொன். ராதாகிருஷ்ணன், “பல உள்ளாட்சி அமைப்பு களில் பா.ஜ.க. வேட்பாளர்களைப் போட்டியிடவே அனுமதிக்காத வகையில் ஆளுங்கட்சி காவல் துறை மூலம் தடுத்து விடும் போக்கு நடை பெற்றுள்ளது. அதையும் மீறி தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்கள் போலி காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டுள்ளன. வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்களை வாபஸ் பெற வைக்க அனைத்து முறைகளும் கையாளப்பட்டன” என்றவர் ஒரு படி மேலே போய், “பல பகுதிகளில் வாக்காளர் களுக்குப் பணப் பட்டுவாடா நடந்துள்ளது” என்றும் தெரிவித்துள்ளது, இடைத்தேர்தல் முறைகேடுகளுக் குச் சரியான உதாரணங்கள். எதிர்க்கட்சிகளைப் போட்டியிட விடாமல் தடுப்பதாகக் கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பல இடங்களில் போட்டியின்றித் தேர்வு என்று பெருமைப்பட்டுக் கொள்கிறது ஆளுங்கட்சி. மாற்றுக் கட்சியினர் முறையாகத் தேர்தலை எதிர்கொள்ள முடியாத சூழலை ஏற்படுத்திய பின்னர் பெறும் வெற்றிக்கு என்ன மரியாதை இருக்க முடியும்? இத்தகைய முறைகேடுகளுக்குக் காரணம், தோற்று விடுவோமோ என்ற அச்சம். நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றிக்குப் பிறகு, நூறு சதவிகித வெற்றி ஆசை ஆளுங்கட்சியைப் பற்றிக் கொண் டிருக்கிறது. மக்களின் வாழ்வாதாரத் தேவைகள் நிறைவேற்றப்பட்டு, அவர்கள் சுயமாக வாழ்வதற்கான வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தால், தோல்வி குறித்து அச்சம் ஏற்படத் தேவையே இல்லை. ஆனால் முறைகேடுகள் நடந்துள்ளன என்பது நிரூபணமாகும் போது, இதுவரை ஆளுங்கட்சி பெற்றுள்ள வெற்றி களும் சந்தேகத்துக்குரியனவாகவே ஆகிவிடு கின்றன. நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற 37 தொகுதிகள் வெற்றி மேல் கூட சந்தேகத்தின் நிழல் விழுவதைத் தவிர்க்க முடியாது” 

“கல்கி” எழுதிய தலையங்கம் இது. ஏன், அ.தி.மு.க.வுடன் கடந்த ஆண்டு வரை தோழமை யோடு பழகிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளேடான “தீக்கதிர்”, இன்று எழுதியுள்ள தலையங் கத்தில்கூட, “இடைத் தேர்தல் முடிவு ஜனநாயகத் திற்கு மிகப் பெரிய தோல்வியாக அமைந்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து வகையான ஜனநாயக நடைமுறைகளையும், தேர்தல் விதிமுறை களையும் அ.தி.மு.க.வினர் காலில் போட்டு மிதித்துள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்தே மாநிலத் தேர்தல் ஆணையத்தின் துணையோடு ஆளுங் கட்சியின் திருவிளையாடல்கள் துவங்கி விட்டன. சாம பேத, தான, தண்ட என்று சொல்லப்படும் அனைத்து வழிகளையும் ஆளுங்கட்சி பின்பற்றியது என்று சொன்னால் அது மிகையல்ல. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வகையில் ஜனநாயகத்தை ஆளுங்கட்சி இழிவுபடுத்தியுள்ளது. மொத்தத்தில் ஆளுங்கட்சியினர் ஜனநாயகத்தை தலைகுனிய வைத்து விட்டனர் என்பதுதான் உண்மை” என்றெல்லாம் எழுதியுள்ளது. இந்தத் தலையங்கங்களில் கூறப்பட்டுள்ள வார்த்தைகள் ஒவ்வொன்றும் உண்மை என்பதை நிரூபிப்பதைப் போலத்தான் ஆளுங்கட்சியின் அத்துமீறிய நடைமுறைகள் இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை இருந்திருக்கின்றன. 

தேர்தல் நடைபெற்ற இடங்களில் அமைச்சர்கள் எல்லாம் எவ்வாறு முகாமிட்டிருந்தார்கள்? எந்த அளவுக்குப் பணப் பட்டுவாடா நடைபெற்றது? அடக்குமுறைகள் எப்படியெல்லாம் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. ஏன் முதல் அமைச்சரே எதிரிகளையே கண்களுக்குத் தெரியவில்லை என்று கூறி விட்டு, விமானப் பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என்றால், அவர் வருகைக் காக பெரும் பொருள் செலவில் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் என்னென்ன? அவையெல்லாம் தேவைதானா? எங்கே தோற்றுவிட்டால், தங்களின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தால், அமைச்சர்கள் தாங்கள் குவித்து வைத்திருந்த நிதியிலிருந்து கணிசமாகச் செலவழிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். பதவி நீடித்தால் செலவழிப்பதை மீட்டுக் கொள்ளலாம் என்ற
தைரியம்தான்! இவ்வளவு பெரிய விலையையும் கொடுத்து, தற்போது பெற்றிருப்பதற்குப் பெயர் வெற்றியா? வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டு வந்திருக்கும் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களே சிரிக்க மாட்டார்களா? “வரலாற்று வெற்றியை வழங்கிய வாக்காளப் பெருமக்களுக்கு முதலமைச்சர் அம்மா நன்றியாம்; மகிழ்ச்சி வெள்ளமாம்; பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டமாம்”! ஆளும் அ.தி.மு.க.வும், மாநிலத் தேர்தல் ஆணை யரும் கூட்டணி அமைத்துக் கொண்டு, காவல் துறையின் துணையோடு பெற்ற வெற்றிக்கு பட்டாசும், இனிப்பும் ஒரு கேடா? மல்யுத்தப் போட்டியில் எதிரிகள் அனைவரையும் செயலிழக்கச் செய்து விட்டு, நடுவரையும் கைக்குள் போட்டுக் கொண்டு தற்போது  
ஆளுங்கட்சி அடைந்துள்ள வெற்றியில் ஏதாவது பொருளோ, பொருத்தமோ உண்டா? நிலைமைகள் தங்குதடையின்றி இப்படியே நீடிக்கு மானால் ஜனநாயகத்தை அருங்காட்சியகத்திலே தான் காண நேரிடும்! உள்ளாட்சி இடைத் தேர்தலில் வென்றது ஜனநாயகமா? பணநாயகமா? இவ்வாறு கலைஞர் தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக