வெள்ளி, 25 ஜூலை, 2014

கலைஞர் கேள்விபதில்

5.கேள்வி : உங்களுக்குப் பிடித்த சட்டமன்றப் பேச்சாளர்?

கலைஞர் : எந்த மன்றமானாலும் சரி, அங்கே கொடிமரம் போல் உயர்ந்துநிற்கும் ஆற்றல்மிகு பேச்சாளர் அறிஞர் அண்ணாதான்.

6.கேள்வி : பிடித்த சபாநாயகர்?

கலைஞர் : ஆரம்ப காலத்தில் டாக்டர்.யு.கிருஷ்ணராவ்-இடைக்காலத்தில் செல்லப்பாண்டியன்-அடுத்து கே.ராஜாராம்-அண்மைக் காலத்தில் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன்.

7.கேள்வி : உங்களுக்குக் கிடைத்த மறக்க முடியாத பதில்?

கலைஞர் : 24.03.1960 அன்று சட்டப் பேரவையில், ஓவியர் வேணுகோபால்சர்மா அவர்களால் “தபால் தலைகளுக்கு என்று வரையப்பட்ட திருவள்ளுவர் ஓவியத்தைச் சட்டமன்றத்தில் வைக்கும் உத்தேசம் அரசாங்கத்திற்கு உண்டா?” என்று நான் கேட்டதற்கு பெரியவர் மாண்புமிகு பக்தவத்சலனார் அவர்கள் எழுந்து, “சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி அவர்கள் அம்மாதிரி ஒரு படத்தை இங்கு சமர்ப்பிக்க முன்வந்தால், கனம் சபாநாயகர் அவர்கள் அதைப்பற்றி யோசிப்பார்கள்” என்று கூறிய பதில் தான் எனக்குக் கிடைத்த மறக்க முடியாத பதில் என்று சொல்வேன். ஏனென்றால் அந்தப் பதிலின் காரணமாகத்தான் சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் 22.3.1964 அன்று அன்றையக் குடியரசுத் தலைவர் மேதகு ஜாகீர் உசேன் அவர்களால் திருவள்ளுவரின் திருவுருவப்படம் திறந்து வைத்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாகத்தான் தி.மு.கழக ஆட்சியில் பேருந்துகள், அரசு விருந்தினர் மாளிகைகளில் திருவள்ளுவர் படங்கள் என்று தொடங்கி, வள்ளுவர் கோட்டம், குமரி முனையில் வானுயர் வள்ளுவர் சிலை என ஆயிற்று!

1.கேள்வி : சட்டசபையில் முதல்நாள் அனுபவம் எப்படியிருந்தது?

கலைஞர் : பந்தயக் குதிரையைப் படைவீரர் அணிவகுப்பில் நிறுத்தி வைத்தது போல் இருந்தது.

2.கேள்வி : பேசிய முதல் பேச்சு?

கலைஞர் : நான் 1957இல் வெற்றிபெற்ற குளித்தலைத் தொகுதியில் உள்ள “நங்கவரம்” பண்ணை விவசாயிகளின் “கையேரு வாரம்-மாட்டேரு வாரம்” என்ற பிரச்சினைக்காகப் பேசியதே பேரவையில் எனது முதல் பேச்சு.

3.கேள்வி : அதிக நேரம் பேசிய நாள்?

கலைஞர் :அதிக நேரம் பேசிய நாட்கள் பல உண்டு. இருப்பினும் 1997ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்தபோது நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்கு, நான் அளித்த பதிலுரைதான் இரண்டு மணி நேரத்துக்கு நீடித்தது.

4.கேள்வி : உங்களுக்கு பிடித்த சட்டமன்றப் பேச்சு?

கலைஞர் : அருமை நண்பர் எம்.ஜி.ஆர். ஆட்சியில்: எதிர்கட்சித் தலைவராக நானிருந்த போது, “பூம்புகார்” நிறுவனத்தின் சார்பில் வாங்கப்பட இருந்த “பல்கேரியா பால்டிகா” என்ற கப்பல் பேர ஊழல் குறித்து இருபது ஆதாரங்களை ஒன்றன் பின் ஒன்றாக எடுத்துவைத்துக் குற்றம் சாட்டிப்பேசியதால், அந்த இரு கப்பல்களுமே வாங்குவது நிறுத்தப்பட்டுவிட்டது என்பது சட்டப் பேரவையின் பரபரப்பான வரலாறு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக